சிறுமியை கர்ப்பமாகிய ரவுடிக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை

புதுச்சேரி: சிறுமியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாகிய வழக்கில் ரவுடிக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுச்சேரி, உறுவையாறு, செல்வா நகரை சேர்ந்தவர் ராசு மகன் முருகன் (எ) பட்ட முருகன், 24. ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது, குண்டர் சட்டத்தின் கீழ் முருகன் கைது செய்யப்பட்டு, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.   

இதற்கிடையே, முருகன் கடந்த 2022ம் ஆண்டு 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாகியுள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மங்கலம் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் முருகன் மீது வழக்கு பதிந்தனர்.

இந்த வழக்கு விசாரணை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞராக பச்சையப்பன் ஆஜரானார். விசாரணை முடிந்து, நீதிபதி சுமதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றவாளி முருகனுக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10  ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக அரசு ரூ. 4 லட்சம் வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பு வழங்கினார். 

Advertisement