விளையாட்டு மைதானத்தை சுருக்கி வகுப்பறை கட்ட பெற்றோர் எதிர்ப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், சேக்குபேட்டை வைகுண்டபுரம் தெருவில் இயங்கும் டாக்டர் பட்டுக்கோட்டை சுந்தரம் சீனிவாசன் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, மாநகராட்சி சார்பில் நான்கு வகுப்பறைக்கான கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. நேற்று பள்ளி விளையாட்டு மைதானத்தில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடந்தது. மைதானத்தை சுருக்கி கட்டடம் கட்ட மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, மாணவர் களின் பெற்றோர் கூறியதாவது:

காஞ்சிபுரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில், பெரிய அளவிலான விளையாட்டு மைதானம் கொண்ட ஒரே பள்ளியாக, டாக்டர் பட்டுக்கோட்டை சுந்தரம் சீனிவாசன் மாநகராட்சி பள்ளி உள்ளது. இங்குள்ள, விளையாட்டு மைதானத்தை சுருக்கி வகுப்பறை கட்டினால், மாணவர்களுக்கு போதுமான இடவசதி இருக்காது.

மேலும், அருகில் உள்ள நீதிமன்றத்திற்கு வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்படும். விளையாட்டு மைதானத்தின் அருகே உள்ள அறிவியல் ஆய்வகத்தில் காலி இடம் உள்ளது. இங்கு, புதிய வகுப்பறை கட்டலாம். இதனால், மாணவர்கள் வகுப்பறையில் இருந்து ஆய்வகத்திற்கு எளிதில் செல்ல முடியும் அல்லது சேதமடைந்துள்ள வகுப்பறையை இடித்துவிட்டு கட்டலாம்.

விளையாட்டு மைதானத்தில் புதிய கட்டடம் கட்டினால், மைதானத்தின் பரப்பளவு சுருங்கி விடும். மாணவர்கள் விளையாட்டு திறனை மேம்படுத்த முடியாத சூழல் ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி கூறுகையில், “டாக்டர் பட்டுக்கோட்டை சுந்தரம் சீனிவாசன் மாநகராட்சி பள்ளியில், புதிய வகுப்பறை கட்டடம், விளையாட்டு மைதானத்தில் கட்டப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

Advertisement