ஆரணி ஆற்றில் கழிவுநீரை விடும் நகராட்சி குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு

பொன்னேரி: ஆரணி ஆற்றில் கழிவுநீரை கலக்க விடும் பொன்னேரி நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக, நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில், விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.

பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட 22 வார்டுகளில், 63 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீரை சுத்திகரித்து, ஆரணி ஆற்றில் விட திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்காக, பெரியகாவணம் பகுதியில் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது, வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பு வழங்குவதற்கான குழாய்கள் அமைக்கும் பணிகளில், நகராட்சி தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.

இந்நிலையில், பொன்னேரி நகராட்சியில் வெளியேற்றப்படும் கழிவுநீரை, ஆரணி ஆற்றில் கலப்பதற்கு, சுற்றுப்புற கிராம விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று பொன்னேரி சப் - கலெக்டர் அப்துல் ராசிக் தலைமையில், விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. இதில், வருவாய், வேளாண்மை, நீர்வளம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

அந்த கூட்டத்தில், விவசாயிகள் பங்கேற்று, பல்வேறு பிரச்னைகளை தெரிவித்தனர்.

அதில், பெரும்பாலான விவசாயிகள், பொன்னேரி நகராட்சியின் கழிவுநீரை ஆரணி ஆற்றில் விடக்கூடாது எனவும், இதனால் ஆற்று நீர் மாசடைந்து விவசாயம் பாதிக்கும் எனவும் தெரிவித்தனர்.

மேலும், கழிவுநீரை வெளியேற்றுவதற்கான மாற்று திட்டம் குறித்து, உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும், சப் - கலெக்டரிடம் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக, பொன்னேரி நகராட்சி அதிகாரிகள், நீர்வளத்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக, விவசாயிகளிடம் தெரிவித்தனர்.

Advertisement