பாசனத்திற்கு மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்கப்படுமா?: நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் வேதனை

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் மும்முனை மின்சாரம் பற்றாக்குறை நெற்பயிா்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். காய்ந்த பயிா்களில் கால்நடைகள் கொண்டு மேய்க்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.


ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீஆதிவராகநல்லுார் மற்றும் சுற்றுப்புற கிராமத்தில் 500 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி செய்துள்ளனா். இப்பகுதி முழுதும் மோட்டாா் மற்றும் கிணற்றுப்பாசனத்தின் மூலம் விவசாயம் செய்து வருகின்றனா். வழக்கமாக குறுவை சாகுபடிக்கு கோடை மழை சற்று கை கொடுக்கும். வெப்பம் அதிகரிப்பு காரணமாக இந்தாண்டு கோடை மழை பெரிய அளவில் பெய்யவில்லை.


மேலும், கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் சரியாக வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டுகளில் விவசாய நிலத்திற்கு தினசரி தொடர்ச்சியாக 12 முதல் 16 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு காலையில் 6 மணி நேரமும், மாலையில் 6 மணி நேரம் என பிரித்து மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.



இதனால் முதல் 6 மணி நேரம் நீர்மோட்டார் இயக்கும்போது, ஒரு குறிப்பிட்ட நெல் பயிர்கள் மட்டுமே பாசனம் பெறுகிறது. மீண்டும் மாலை 6 மணிக்கு மோட்டார் இயக்கும்போது, அதே இடத்தில் மட்டுமே பாசனம் கிடைக்கிறது. குறிப்பிட்ட இடத்தை தாண்டியுள்ள பயிர்களுக்கு தண்ணீர் கிடைப்பது இல்லை. இதனால், நெல்லுக்கு முழுமையாக தண்ணீா் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் பாிதவித்து வருகின்றனா்.



இப்பகுதியில் தற்போது சுமாா் 200 ஏக்கருக்கு மேல் பயிா்கள் தண்ணீர் இன்றி கருகி சருகாக மாறியுள்ளது. சருகாக மாறி வைக்கோலாக உள்ள நெற்பயிா் நிலத்தில், விவசாயிகள் தங்களது கால்நடைகளை விட்டு மேய்ச்சல் நிலமாக மாற்றும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.



இது குறித்து ஸ்ரீ ஆதிவராகநல்லுாரைச் சோ்ந்த விவசாயி பிரபாரன் கூறியதாவது;
விவசாய பணிகளுக்கு கடந்த காலங்களில் மும்முனை மின்சாரம் தங்கு தடையின்றி வழங்கினா். ஆனால் தற்போது சில வாரங்களாக மும்முனை மின்சாரம் போதிய அளவு வழங்கப்பட வில்லை. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வழங்கப்படும் மின்சாரம் போதுமானதாக இல்லை. தற்போது வழங்கும் மின்சாரமும் காலை 6 மணி நேரம், இரவு 6 மணி நேரம் என பிாித்து வழங்கப்படுவதால் வயலில் குறிப்பிட்ட ஒரே இடத்திற்கு மட்டுமே தண்ணீா் பாய்ச்ச முடிகிறது. மின்சாரம் போதிய அளவு மின் அழுத்தம் இல்லாததால் மின்மோட்டாா்கள் சாிவர இயக்க முடிவதில்லை. கடந்த ஆட்சிக்காலத்தில் ஸ்ரீ முஷ்ணம் சுற்றுவட்டார கிராமங்கள் டெல்டா பகுதியில் சோ்க்கப்பட்டதால், 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கிடைக்கும் என எதிா்பாா்த்தோம். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது என தொிவித்தாா்.

ஸ்ரீ முஷ்ணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கருகி வரும் நெற்பயிர்களை மாவட்ட நிா்வாகம் உாிய நடவடிக்கை எடுத்து காப்பாற்றவேண்டும் என விவசாயிகள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement