திருச்சியில் ரூ.174 கோடியில் கொரிய காலணி தொழிற்சாலை

திருச்சி: தென் கொரியாவின் 'டிகேஜி' என்ற 'டேக்வாங்' நிறுவனம், புதிய ஷூ தொழிற்சாலையை திருச்சி யில் தொடங்க உள்ளது.

தென் கொரியாவைச் சேர்ந்த காலணி உற்பத்தி நிறுவனமான டிகேஜி, திருச்சி நவல்பட்டு பகுதியில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் புதிய உற்பத்தி மற்றும் இ - சேவை தளத்தை அமைக்க உள்ளது.

அதற்காக, 'மெட்ராஸ் எக்ஸ்போர்ட் பிராசஸிங் ஜோன்' அமைப்பிடம், அதிகாரப்பூர்வமாக அனுமதி பெற்றுள்ளது. கடந்த, 2024ல் நடந்த உலக முதலீட்டாளர்கள் கூட்டத்தில், கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, திருச்சியில் தோல் அல்லாத காலணி உற்பத்திக்கான நிறுவனம் தொடங்கப்பட உள்ளது.

இந்த தொழிற்சாலைக்காக, நவல்பட்டு பகுதியில், 69 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அதிநவீன காலணி உற்பத்தி தொழிற்சாலையை தொடங்குவதற்கு, டிகேஜி நிறுவனம் முதல் கட்டமாக, 174 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

இங்கு, உலக புகழ்பெற்ற சர்வதேச விளையாட்டு பிராண்டான 'நைக்' நிறுவனத்துக்கான விளையாட்டு காலணிகள் உற்பத்தி செய்யப்பட உள்ளன.

இந்த தொழிற்சாலையால், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த, 13,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.

ஜவுளி, சிறு குறு தொழில்கள் மற்றும் மொத்த வியாபார மையமாக அறியப்பட்ட திருச்சியில், இந்த தொழிற்சாலை தொடங்குவதன் வாயிலாக உலகளாவிய விளையாட்டு காலணி தயாரிப்பு சந்தையில், திருச்சி மிக முக்கிய வர்த்தக மையமாக மாறும் என, எதிர் பார்க்கப்படுகிறது.

Advertisement