பிக்சட் டிபாசிட்டுக்கு மாற்றான பண்டுகள் என்னென்ன?

எந்த சேமிப்பும் 40 வயது வரை இல்லை என்றாலும் அடுத்த 20 ஆண்டு காலத்துக்கு பிறகு, மாதந்தோறும் வாழ்வாதாரத்துக்கு வழி வகை செய்வதற்கான வழிமுறைகள் என்ன? எஸ்.செல்வக்கோ பெருமாள், காஞ்சிபுரம் தேசிய பென்ஷன் திட்டம் தான் இதற்கு சரியான தீர்வாக இருக்க முடியும். சமீபத்தில் என்.பி.எஸ்., ஓய்வு கால வருவாய் திட்டம் என்ற ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் கீழ் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று சிஸ்டமேடிக் பே- அவுட் ரேட், மற்றொன்று சிஸ்டமேடிக் யூனிட் ரிடம்ஷன்.

முதலாவதில், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகை, என்.பி.எஸ்.,ஸில் இருந்து உங்கள் வங்கி கணக்குக்கு வரும்.

இரண்டாவது வகையில், எத்தனை யூனிட்டுகளை விற்பனை செய்ய சொல்கிறீர்களோ, அது அந்த மாதத்தில் உள்ள சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டு, என்ன தொகை வருகிறதோ, அது முதலீட்டாளர் வங்கி கணக்குக்கு வந்து சேரும்.

ஒருவர் 40 வயதுக்கு பிறகு தொடர்ந்து என்.பி.எஸ்.,ஸில் முதலீடு செய்து வந்தால், 60 வயது ஆகும்போது, அவரது மொத்த முதலீட்டில் 60 சதவீதம் வரை பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். இதன் இன்னொரு வாய்ப்பு தான் இந்த ஓய்வு கால வருவாய் திட்டம்.

மியூச்சுவல் பண்டுகளில் இருக்கும் சிஸ்டமேடிக் வித்டிராயல் திட்டம் போன்றது தான் இதுவும். இங்கேயும், மிச்சமிருக்கும் யூனிட்டுகள் சந்தையின் போக்குக்கு ஏற்ப வளர்ந்து கொண்டே இருக்கும்.

பிக்ஸ்டு டிபாசிட் போல, ஒரே முறையில் முதலீடு செய்ய ஏற்ற பண்டுகளை பரிந்துரைக்கவும். கோபால், மின்னஞ்சல் பிக்சட் டிபாசிட் போன்றே ஒரே முறையில் முதலீடு செய்ய மியூச்சுவல் பண்டில் உள்ள கடன் மற்றும் ஆர்பிட்ரேஜ் பண்டுகள் மிகச் சிறந்தவை.

நீங்கள் மூன்று மாதங்கள் வரை குறுகிய காலத்திற்கு முதலீடு செய்ய நினைத்தால், அவசரத் தேவைக்கு உடனே பணம் எடுக்கக்கூடிய லிக்விட் பண்டுகளில் முதலீடு செய்யலாம்.

ஓராண்டு வரை முதலீடு செய்ய நினைத்தால் அல்ட்ரா ஷார்ட் பண்டுகளையும், ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை பாதுகாப்பாக முதலீடு செய்து, பிக்சட் டிபாசிட்டை விட கூடுதல் வட்டி பெற விரும்புபவர்கள், கார்ப்பரேட் பாண்ட் பண்டுகளையும் தேர்வு செய்யலாம்.

இந்த பண்டுகள் அனைத்தும் வங்கியை விட சற்று கூடுதல் லாபம் தரக்கூடியவை என்றாலும், உங்களது முதலீட்டு காலத்தை பொறுத்தே எதில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்க வேண்டும்.

நீங்கள் முதலீடு செய்யும் பண்டின் வகையை பொறுத்து வரி விதிப்பு மாறும். 'கடன் பண்டுகளில்' கிடைக்கும் லாபத்துக்கு, உங்களுடைய தனிநபர் வருமான வரி வரம்பின்படியே முழுமையாக வரி விதிக்கப்படும்.

ஆனால், 'ஆர்பிட்ரேஜ் பண்டுகள்' ஈக்விட்டி வகையைச் சேர்ந்தவை என்பதால், அவற்றுக்கு ஈக்விட்டி பண்டுகளுக்கான குறைவான வரியே விதிக்கப்படும்.

சமீபத்தில் ஒரு வேலையில் இருந்து விலகினேன். பி.எப்., தொகையை எடுத்துவிட நினைக் கிறேன். என் முடிவு சரியா? சாந்தா ராஜேந்திரேன், திருவள்ளூர் உங்களுக்கு ஏதேனும் அவசரமான பணத்தேவை இருந்தால் மட்டும் பி.எப்., பணத்தை எடுங்கள்; இல்லையென்றால், அந்த பணத்தை தொடவே வேண்டாமே? விரைவில் உங்களுக்கு அடுத்த வேலை கிடைக்கும்; அடுத்ததொரு வாழ்க்கை அமையும்.

அப்போது, இந்த பி.எப்., தொகையை அடுத்த கணக்கோடு சேர்த்துக் கொள்ளலாம். வேலைகள் மாறலாம்; ஆனால், பி.எப்., மட்டும் அப்படியே தொடரலாமே?

மேலும், ஐந்து ஆண்டுகள் தொடர் சர்வீஸ் இருக்குமானால், அப்போது நீங்கள் பி.எப்., இருப்பில் இருந்து எடுக்கும் பணத்துக்கு வரி இல்லை. மேலும், இதுபோல் தொடர் சர்வீஸின் இன்னொரு பலன் 20 ஆண்டுகளுக்கு பின்னர் தெரியும்.

அதாவது, பிற்காலத்தில் இ.பி.எப்., பென்ஷன் தொகை நிர்ணயிக்கப்படும்போது, தொடர்ச்சியாக 20 ஆண்டுகள் சர்வீஸ் இருக்குமானால், உங்களுக்கு கூடுதலாக இரண்டு ஆண்டுகள் போனஸ் காலம் சேர்க்கப்படும்.

இந்த 20 ஆண்டுகள் சர்வீஸ் என்பது ஒரே நிறுவனத்தில் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி இருந்தாலும் இது பொருந்தும்.



நான் ஓய்வூதியர். வைப்பு நிதியில் ஆண்டுதோறும் 'ஆட்டோ ரெனியூவல்' செய்து கொள்ளலாமா? அல்லது ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்து கொள்வது சரியாக இருக்குமா? எம்.குமரன், கோவை ஆட்டோ ரெனியூவல் செய்வதில் உள்ள ஒரே சிக்கல், வட்டி மாற்றம்தான். அந்த நேரத்தில் என்ன வட்டி விகிதம் இருக்கிறதோ, அதற்கேற்பவே வட்டி கிடைக்கும். கடந்த ஓராண்டுக்கும் மேலாக பெரும்பாலான வங்கிகளில் பெரிய வட்டி விகித மாறுதல் ஏற்படவில்லை என்பது உண்மைதான்.

இதற்கு மேல் வட்டி விகிதம் குறையாது என்று உறுதியாக சொல்ல இயலாது. இப்போதைக்கு ரெப்போ விகிதம் 5.25 சதவீதமாக இருப்பதால் இந்த நிலை. வேறேதேனும் பொருளாதார நெருக்கடி ஏற்படுமானால், வட்டி விகிதம் மேலும் குறைக்கப்படலாம். அப்போது, உங்கள் முதலீட்டுக்கு கிடைக்கும் வட்டியும் குறையும்.

ஆட்டோ ரெனியூவலுக்கு பதில், இப்படி வேண்டுமானால் செய்து பாருங்கள். உங்கள் பணத்தை ஒன்று, இரண்டு, மூன்று ஆண்டுகளில் முதிர்வு அடைவது போன்ற வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு தொகை முதிர்ச்சி அடையும்; மீதமுள்ள தொகைகள் கூடுதல் வட்டியை ஈட்டிக் கொண்டிருக்கும்.

முதிர்வு அடையும் தொகைக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அது, அதன் அடுத்த சுழற்சியில் கூடுதல் வட்டி பெற்று தரலாம். இப்படி செய்யும் போது, ஓரளவுக்கு சராசரியாக சற்றே கூடுதல் வட்டி பெற முடியுமே!



'டெபிட் கன்சாலிடேஷன் லோன்' என்றால் என்ன? வி.தேவசேனா, திருப்பூர் எல்லா கடன்களையும் அடைத்துவிட்டு, ஒரே கடனாக வைத்துக்கொள்வதுதான் ஒருங்கிணைந்த கடன் திட்டம். அந்த காலத்தில் இதை 'பர்சனல் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்பர்' என்று சொல்வர்.

சமீப ஆண்டுகளில் இதுவே ஒரு தனிக்கடன் வகையாக மாறியிருக்கிறது. இதுவும் பர்சனல் லோன் வகையைச் சேர்ந்தது தான்.

Advertisement