18ம் கால்வாய் சீரமைப்பு பணிகளை வேகப்படுத்துங்கள்: நீர் திறப்புக்கு முன் பணிகளை விரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
கூடலுார்:பெரியாறு அணையில் நீர் இருப்பு குறைவாக இருக்கும் போதே 18ம் கால்வாயில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் மானாவாரி நிலங்களின் பாசன வசதிக்காகவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முல்லைப் பெரியாறு அணையிலிருந்து முக்கிய பாசன திட்டமான 18ம் கால்வாய் திட்டம் உள்ளது. லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றின் தலைமதகில் துவங்கி கூடலுார், கம்பம், உத்தமபாளையம், பண்ணைப்புரம், கோம்பை, தேவாரம் வழியாக போடி வரை 47 கி.மீ., தூரத்தில் கால்வாய் அமைந்துள்ளது. கால்வாயை ஒட்டியுள்ள 44 கண்மாய்களை நிரப்பி நிலத்தடி நீரை பெருக்குவது முக்கியமானதாக உள்ளது. இக் கால்வாய் மூலம் 4615 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் நேரடி பாசன வசதி பெரும் வகையில் உள்ளது.
இக் கால்வாய் திட்டம் மூலம் போடி வட்டார விவசாயிகள் பயன்படும் வகையில் தேவாரம் அருகே சுத்த கங்கை ஓடையிலிருந்து போடி கூவலிங்க ஆறு வரை 14.1 கி.மீ., தூரத்திற்கு நீட்டிக்கப்பட்டு கொட்டங்குடி ஆற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதல் கிராமங்கள் பயன் பெறும்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் அணையில் நீர் இருப்பை பொறுத்து கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை துவங்கிய போதிலும் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் போதிய அளவு மழை பெய்யாததால் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்கும் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் மழை தீவிரமடைந்து நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது.
ஆக்கிரமிப்பு அதிகம்: இக் கால்வாயில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு அதிகமாகி தண்ணீர் முறையாக கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் பல ஆண்டுகளாக இருந்து வந்த ஆக்கிரமிப்புகளையும் அகற்றவில்லை. முற்புதர்கள் சூழ்ந்த போதிலும் சீரமைக்க நடவடிக்கை இல்லை. கடந்த ஆண்டு 18ம் கால்வாய் சீரமைப்பு பணிகளுக்காக அரசு ரூ. 12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் நீர்வளத்துறையினர் சீரமைப்பு பணியை துவக்கி மெத்தனமாக செயல்படுத்தி வருகின்றனர். கால்வாயின் தலைமதகு பகுதியில் சேதம் அதிகமாக உள்ளது. லோயர்கேம்ப் தொட்டி வாய்க்காலில் இரு பகுதிகளிலும் உடையும் அபாய நிலை உள்ளது.
சீரமைக்காத தடுப்பணை: கூடலுார் ஒட்டான்குளம் கண்மாய்க்கு நீர் திறந்து விடப்படும் மந்தை வாய்க்கால் தலைமதகு பகுதியில் அகற்றப்பட்ட மதகுப்பகுதியை இதுவரை சீரமைக்க முன்வரவில்லை. 18ம் கால்வாய் நீர் திறப்புக்கு முன் ஒட்டான்குளம் கண்மாயை நம்பி 500 ஏக்கருக்கும் மேல் பாசன வசதி உள்ள முதல் போக நெல் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் அதற்கான மந்தை வாய்க்கால் அருகே உள்ள தடுப்பணையை கடந்த ஆண்டு அகற்றிவிட்டு இதுவரை சீரமைக்க நீர்வளத்துறையினர் முன் வரவில்லை. இதனால் ஒட்டான்குளம் கண்மாயை நம்பியுள்ள விவசாயம் நிலங்களும் முதல் போக நெல் சாகுபடியை துவக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் இருந்து நீர்வளத்துறையினர் விரைவாக சீரமைப்பு பணிகளை செய்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும்
-
மாநில அளவிலான யோகா போட்டி: அசத்திய மேடவாக்கம் அரசு பள்ளி
-
தேசிய 'கிக் பாக்சிங்' சாம்பியன்ஷிப் 78 பதக்கங்கள் அள்ளியது தமிழகம்
-
மாநில அளவிலான யோகா போட்டி அசத்திய மேடவாக்கம் அரசு பள்ளி
-
தேசிய 'கிக் பாக்சிங்' சாம்பியன்ஷிப் 78 பதக்கங்கள் அள்ளியது தமிழகம்
-
மது அருந்த எதிர்ப்பு தெரிவித்த தாயை அடித்து கொன்றார் மகள்
-
மதுராந்தகம் துணை அஞ்சல் நிலையத்தில் ஏ.டி.எம். வசதி ஏற்படுத்தப்படுமா?