சிட்டி பேனர்/ வேளச்சேரி தப்புமா?
* ஆண்டுதோறும் வெள்ளத்தில் தத்தளிக்கும்... * கழிவுநீர் குழாயை உயர்த்துவதில் குழப்பம் * மல்லுக்கட்டும் மூன்று துறைகளால் சிக்கல்
சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் செல்லும் ஆறு கழிவுநீர் குழாய்களை, 1 மீட்டருக்கு உயர்த்தாததால், வேளச்சேரியில் ஆண்டுதோறும் பருவ மழைக்காலங்களில் வெள்ளப்பாதிப்பு தொடர்கிறது. வனத்துறை, மாநகராட்சி, குடிநீர் வாரியம் ஆகிய மூன்று துறைகள் இடையே ஒற்றுமை இல்லாததே இந்த சிக்கலுக்கு காரணம். அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து பணிகளை செய்தால் மட்டுமே, வேளச்சேரி வெள்ள பாதிப்பில் இருந்து தப்பும்.
சென்னையில், ஒவ்வொரு பருவமழைக்கும் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியாக வேளச்சேரி உள்ளது. ஆலந்துார், ஆதம்பாக்கம், தரமணி, பெருங்குடி, நங்கநல்லுார், கவர்னர் மாளிகை, ஐ.ஐ.டி., ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் வெள்ளம், வேளச்சேரி ரயில் தண்டவாளத்தை கடந்து, சதுப்பு நிலம், பகிங்ஹாம் கால்வாயில் பயணித்து, முட்டுக்காடு கடலில் கலக்கிறது.
இப்பகுதிகளில் வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், தெருக்களில் சிறிய அளவில் இருந்த வடிகால்கள் அகலப்படுத்தப்பட்டன. தவிர, புதிதாக வடிகால்களும் கட்டப்பட்டன.
கால்வாய்களை பெரிய அளவில் கட்டியதால், மழைக்காலத்தில் இவற்றில் வடியும் வெள்ளம், சதுப்பு நிலத்தில் வேகமாக கலக்கிறது. இதனால், தண்ணீர் உள்வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டு, மேற்கண்ட பகுதிகளில் வெள்ளப்பாதிப்பு ஏற்படுகிறது.
இதை தடுக்க, சதுப்பு நிலத்தில் இருந்து பகிங்ஹாம் கால்வாய் செல்லும் வெள்ளம், வேகமாக வடியும் வகையில், 200 அடி அகலத்தில் இருந்த ஒக்கியம் மடு, 625 அடி அகலமாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும், ரேடியல் சாலை, சோழிங்கநல்லுார் மற்றும் செம்மஞ்சேரியில் உள்ள பகிங்ஹாம் கால்வாயில் சேரும் வகையிலும், 1.7 கி.மீ., நீளத்திற்கு கால்வாய் கட்டப்படுகிறது. இதனால், குடியிருப்பு பகுதிகளில் வெள்ள பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், வேளச்சேரியில் இருந்து சதுப்பு நிலத்தில் வெள்ளம் வடியும் இடத்தில், நீரோட்டத்திற்கு தடையாக, 450 முதல் 750 எம்.எம்., அளவுடைய ஆறு கழிவுநீர் குழாய்கள் உள்ளன. பெருங்குடி, ஆலந்துார், அடையாறு மண்டலங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இந்த குழாய்கள் வழியாக, பெருங்குடி சுத்திகரிப்பு நிலையம் செல்கிறது.
இந்த குழாய்கள் சதுப்பு நிலத்தில், 1.2 கி.மீ., நீளத்திற்கு தரைமட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 600 மீட்டர், நீர்வழித்தடத்தில் செல்கிறது. தண்ணீர் சீராக செல்வதற்கு, குழாயின் கீழ் பகுதியில் பள்ளம் எடுத்து, நீர்வழி பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
ஆனால், அதிகப்படியான வெள்ளம் செல்லும்போது, பிளாஸ்டிக் குப்பை, ஆகாய தாமரை இந்த குழாயில் சிக்குவதால், நீரோட்டத்தில் தடை ஏற்படுகிறது. இதனால், வேளச்சேரி பகுதியில் வெள்ளம் சூழ்கிறது.
எனவே, நீரோட்டத்திற்கு தடையாக 600 மீட்டர் நீளத்தில் உள்ள கழிவுநீர் குழாய்களை, 1 மீட்டர் உயர்த்தி அமைக்க வேண்டும் என, வேளச்சேரி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
வனத்துறை கட்டுப்பாட்டில் சதுப்பு நிலம், குடிநீர் வாரிய பராமரிப்பில் கழிவுநீர் குழாய்கள், வெள்ள பாதிப்பை தடுக்க வேண்டிய பொறுப்பு மாநகராட்சி என, மூன்று துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
ஆனால், கழிவுநீர் குழாயை யார் உயர்த்தி அமைப்பது என்ற இழுபறி, ஐந்து ஆண்டுகளாக நீடித்து வருவதால், மக்கள் இன்னல் தொடர்கிறது.
@block_B@ வேளச்சேரி பகுதி நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஒவ்வொரு பருவமழைக்கும், 176, 177, 178 ஆகிய வார்டுகள் கடுமையாக பாதிக்கப்படும். சதுப்பு நிலத்தில் நீரோட்டம் சீராக இருந்தால் தான், வேளச்சேரியில் வெள்ளம் தேங்குவது தடுக்கப்படும். ஆனால், நீரோட்டத்திற்கு தடையாக உள்ள, ஆறு கழிவுநீர் குழாய்களை உயர்த்தி அமைக்க, பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் எந்த அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் கண்டுகொள்ளவில்லை. புதிய அரசு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, வேளச்சேரியில் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.block_B
@block_B@ கழிவுநீர் குழாயை மாற்றி அமைப்பது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சதுப்பு நிலத்தில் உள்ள கழிவுநீர் குழாய்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல, முறையான பாதை வசதி இல்லை. அதனால், குழாயில் அடைப்பு ஏற்படும் போது சிக்கல் உண்டாகிறது. வெயில் காலத்தில்கூட அடைப்பை அகற்ற முடியும். ஆனால், மழைக்காலத்தில் சகதி அதிகளவு சேர்வதால் அடைப்பை அகற்றுவதில் சிக்கலாகிறது. வெள்ள பாதிப்பின்போது, அங்கு சென்று பார்க்கவும் முடிவதில்லை. குழாய்களை உயர்த்தி அமைக்க, மூன்று துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.block_B
@block_B@ மூடு கால்வாய்க்குள் கழிவுநீர் குழாய் மாற்றி அமைக்க ‘மெட்ரோ’ முடிவு சோழிங்கநல்லுார் மற்றும் செம்மஞ்சேரியில் வடியும் வெள்ளம், பகிங்ஹாம் கால்வாயில் நேரடியாக சேரும் வகையில் சோழிங்கநல்லுார் – மேடவாக்கம் சாலையில் இருந்து, 1.7 கி.மீ., நீளத்திற்கு மூடுகால்வாய் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2023ல், 47 கோடி ரூபாயில் தொடங்கிய பணி இன்னும் முடியவில்லை. மொத்தம் 10 அடி அகலம், 8 அடி உயரத்தில் மூடு கால்வாய் கட்டும் இடத்தில், 300 மீட்டர் நீளத்தில், 70 செ.மீ., அளவு உடைய கழிவுநீர் குழாய் செல்கிறது. இக்குழாயை மாற்றி அமைக்காமல் மூடுகால்வாய் கட்டுவதால், மழைக்காலத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என, சோழிங்கநல்லுார் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.குழாயை யார் அகற்றுவது என, நெடுஞ்சாலைத் துறை, குடிநீர் வாரியம் மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனம் இடையே குழப்பம் தொடர்ந்தது. இந்நிலையில், கால்வாய் அருகில், 300 மீட்டர் நீளத்திற்கு புதிய கழிவுநீர் குழாய் அமைக்கவும், கால்வாய்க்குள் இருக்கும் குழாயை அகற்றவும் ஆகும் தொகையை தருவதாக, மெட்ரோ நிறுவனம் ஒத்துக்கொண்டுள்ளது. அதேபோல், குழாய் மாற்றும் பணியை குடிநீர் வாரியம் மேற்கொள்ள உள்ளது.block_B
மேலும்
-
மேடவாக்கம் ஊராட்சி அட்டூழியம் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் திறப்பு
-
வீட்டுமனை பட்டா கோரி கல்லுக்குட்டை மக்கள் மனு
-
விளையாட்டு வேலம்மாள், பி.ஏ.கே., பள்ளி அணி கூடைப்பந்து போட்டியில் சாம்பியன்
-
‘போக்சோ’ வழக்கில் கைதான தற்காலிக ஆசிரியர் ‘டிஸ்மிஸ்’
-
குறிச்சி கோயிலில் குண்டம் பாதுகாப்பாக நடத்த உத்தரவு
-
விவசாயி தற்கொலை