மேடவாக்கம் ஊராட்சி அட்டூழியம் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் திறப்பு

மேடவாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட மேடவாக்கம் ஊராட்சி அலுவலக வளாகத்தில், தீயணைப்பு நிலையம், வி.ஏ.ஓ., அலுவலகம், நுாலகம் அமைந்துள்ளதோடு, அருகிலேயே அரசு பள்ளி, சமுதாய நலக்கூடம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளன.

இந்நிலையில், மேடவாக்கம் ஊராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் வாகனங்கள் மூலம் சேகரிக்கப்படும் கழிவுநீரை, ஊராட்சி அலுவலக வளாகத்தில் இருந்தபடியே, மாம்பாக்கம் பிரதான சாலையோர மழைநீர் வடிகாலில் துளையிட்டு, குழாய் மூலம் ஊராட்சி நிர்வாகம் திறந்து விடுகிறது.

தினமும் 10 லாரிகள் மூலம் மழைநீர் வடிகாலில் கழிவுநீர் திறந்து விடுவதால், பெரும்பாக்கம் ஏரி நீர் மாசடைந்து, நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், மழைநீர் வடிகால் நீண்ட நாட்களாக துார்வாரப்படாமல் உள்ளதால், அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினால், ஊராட்சி நிர்வாகம் முறையாக பதில் அளிப்பதில்லை.

எனவே, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு, விதிமீறல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement