சேவைக்கு 'உயிர் கொடுத்த' முத்து சுகுணா

சேவை செய்வதே உயிர் மூச்சு என்று வாழும் பலருக்கும் சேவையின் போதே உயிர்பிரியும் வாய்ப்பு கிடைப்பதில்லை. என் தோழி முத்துசுகுணாவிற்கு அந்த பாக்கியம் கிடைத்து விட்டது என்று நெகிழ்கிறார் திண்டுக்கல் காந்திகிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி.

முத்து சுகுணா, விஜயலட்சுமி இருவரின் சேவையைப் பாராட்டி தினமலர் நாளிதழில் 'முதுமைத் தோழிகள்' என்ற பெயரில் ஏற்கனவே கட்டுரை வெளியானது. திண்டுக்கல்லில் வேலை பார்த்தபோது இருவரும் தோழிகளாகினர். திண்டுக்கல் மாவட்ட நீதிபதியின் நேர்முக உதவியாளராக வேலை பார்த்தார் முத்து சுகுணா. டாக்டர் சவுந்தரம் ராமச்சந்திரன் 1947ல் தொடங்கிய விதவை, கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கான காந்திகிராமம் கஸ்துாரிபா சேவிகா ஆஸ்ரமம் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியையாக இருந்தார் விஜயலட்சுமி.

நீதிமன்றத்தில் விவாகரத்தாகும் பெண்களின் மறுவாழ்வுக்காக அவர்களை பள்ளிக்கு அனுப்பும் போது ஏற்பட்ட பழக்கம் இருவரையும் நட்பாக்கியது. சொந்தக்கதை, சோகக்கதை பேசி செல்லும் நண்பர்கள் மத்தியில் இருவரின் சிந்தனையும் கிராமப்புற கல்வியறிவு அல்லாதோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் பக்கமே நின்றது. நீதிமன்றங்களில் விவாகரத்து பெற்ற பெண்கள் ஜீவனாம்சத்திற்காக மீண்டும் மீண்டும் வந்து நின்றது முத்துசுகுணாவை மிகவும் பாதித்தது.

வெறும் பேச்சுடன் நின்றுவிடாமல் 2003ல் திண்டுக்கல் அருகே பாலகிருஷ்ணாபுரத்தில் சரோஜினி நாயுடு ஊரகநலம் மற்றும் கல்வி அறக்கட்டளையை துவக்கினார் முத்து சுகுணா. கிராமப்புறப் பெண்களுக்கான கல்வி, முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட ஆரம்பித்து பின்னர் 2010ல் மதுரை துவரிமானுக்கு அறக்கட்டளை அலுவலகத்தை மாற்றினார். பின்னர் அன்னை முதியோர் இல்லம் துவங்கினார் என்று தோழியின் கதையை விவரித்தார் விஜயலட்சுமி.

''கிராமங்களில் வறுமையில் உள்ள குழந்தைகளின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும் நோக்கத்தில் தான் அறக்கட்டளை ஆரம்பித்தோம். முதியோர் இல்லம் துவங்கிய போது ஆதரவற்ற பெண்கள் சேர்ந்தனர். சாய் மாலைநேரப் பள்ளியை துவங்கி குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கினோம். அறக்கட்டளை செயலாளராக முத்துசுகுணா இருந்தார். நான் பொருளாளர். நன்கொடையாளர்கள் நிதி தருவதால் இல்லத்தை நடத்தி வருகிறோம்.

சேவையால் பிரிந்த உயிர் ஆண்டுதோறும் 20 பேரை அழைத்துக் கொண்டு ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு செல்வது முத்து சுகுணாவின் வழக்கம். இந்தாண்டு ஜூன் 1ல் முத்துசுகுணா ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்றார். அங்கிருந்து அயோத்தி, காசி சென்று திரும்பும் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் ஓங்கோலில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஜூன் 24ல் இறந்தார். முத்து சுகுணாவின் மரணம் எங்களை நிலைகுலையச் செய்தது. உயிர் பிரியும் தருவாயிலும் சேவை சேவை என தன்னை கரைத்துக் கொண்டது தியாகத்தின் உச்சம். முத்து சுகுணா தொடங்கி வைத்த சரோஜினிநாயுடு ஊரக கல்வி அறக்கட்டளையும் அன்னை முதியோர் இல்லமும் என்றென்றும் தொடரும்,'' என்றார் விஜயலட்சுமி.

@quote@ கிராமங்களில் வறுமைநிலையில் உள்ள குழந்தைகளின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும் நோக்கத்தில் அறக்கட்டளை ஆரம்பித்தோம்quote

Advertisement