பாகிஸ்தானில் ராணுவ வளாகம் மீது தற்கொலைப்படை தாக்குதல்; 4 ராணுவ வீரர்கள் பலி
கராச்சி: பாகிஸ்தானில் ராணுவ வளாகத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள அந்நாட்டு துணை ராணுவப் படையான சிந்து ரேஞ்சர்ஸ் அமைப்பின் வளாகத்திற்குள், நேற்றிரவு 8.30 மணியளவில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பத்தால் வாகனத்தில் இருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்து சிதறியது.
தொடர்ந்து,ராணுவ வளாகத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள் கைக்குண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாகச் சுட்டும் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர்.இதற்கு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர். தாக்குதலைத் தொடர்ந்து, ரேஞ்சர்ஸ் வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலைகள் முற்றிலுமாக சீல் வைக்கப்பட்டன. மேலும், அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் காயமடைந்த ஒரு பயங்கரவாதி உயிருடன் பிடிபட்டான். இந்தத் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பின் பயங்கரவாதப் பிரிவான ஜமாத்-உல்-அஹ்ரார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.