செய்த வேலைக்கு பணம் கிடைக்காமல் ஒப்பந்ததாரர்கள் திண்டாட்டம்! அரசியல்வாதிகள் வாய்மொழி உத்தரவை நம்பியதால் சிக்கல்
காஞ்சிபுரம்: கடந்த ஆட்சி காலத்தில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் வாய்மொழி உத்தரவை நம்பி, காஞ்சிபுரத்தில் குடிநீர், சாலை பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள், 20 கோடி ரூபாய் வரை செலவிட்டும், அந்த தொகையை பெற முடியாமல் திண்டாடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜா பாத், குன்றத்துார், ஸ்ரீபெரும் புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் கட்டுப்பாட்டில் 274 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளுக்கு, ஊராட்சி பொது நிதி, ஒன்றிய பொது நிதி, மாவட்ட ஊராட்சி பொது நிதி, எம்.எல்.ஏ., - எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி, 15வது நிதிக்குழு மானியம், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் வளர்ச்சி பணிகள் செய்யப்படுகின்றன.
திணறல்
பெரும்பாலும், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், ஆளுங்கட்சி ஒன்றிய தலைவர்கள், மாவட்ட செயலர்கள், ஒன்றிய செயலர்கள் பரிந்துரைக்கும் பணிகளுக்கு, அப்பகுதி ஒப்பந்ததாரர்கள் மூலம் முன்கூட்டியே செய்து விடுகின்றனர்.
அதன் பின், டெண்டரில் பணியை சேர்த்து, செய்த பணிக்கு பணத்தை விடுவிக்கும் வழக்கம் இருந்து வருகிறது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் ஒப்பந்ததாரர்கள், ஆளுங்கட்சியினர் வாய்மொழி உத்தரவை நம்பி பல வேலைகளை செய்தனர். அடுத்து நடக்கும் டெண்டரில் வைத்து, பணி ஆணை பெற்று, கல்லா கட்டிவிடலாம் என கருதினர்.
ஆனால், எதிர்பாராத விதமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தது. இதனால், இதுவரை நடந்த டெண்டர்கள், பணிகள் குறித்தெல்லாம் ஆய்வு நடந்து வருகிறது.
இதனால், ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க.,வின ரின் வாய்மொழி உத்தரவை நம்பி வேலை செய்தவர்கள், அதற்கான செலவுத் தொகையை பெற முடியாமலும், ஆன்லைன் டெண்டரில் பங்கேற்க முடியாமலும் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, ஒப்பந்ததாரர் கூறியதாவது:
காஞ்சிபுரம் தி.மு.க., மாவட்ட செயலரிடம் வந்த புகாரின் அடிப்படையில் பணி ஆணை இல்லாமல், ஒன்றிய குழு தலைவர் முன்கூட்டியே குடிநீர் பணிகளை செய்ய அறிவுறுத்தினார்.
நானும் 10 லட்சம் ரூபாய் செலவிட்டு குடிநீர் பணியை செய்து விட்டேன். செய்த பணிக்கு டெண்டர் வைக்க அதிகாரிகள் இழுத்தடிக்கின்றனர். கடன் வாங்கி செய்து விட்டு, ஒரு ஆண்டுக்கு மேலாக வட்டி கட்ட முடியாமல் திணறி வருகிறேன்.
இதுபோல், ஊரக உள்ளாட்சி நிர்வாகிகள், துறை அதிகாரிகளின் பேச்சை கேட்டு, பணி ஆணை பெறாமல் குடிநீர், சாலை பணிகளை முடித்த ஒப்பந்ததாரர்கள் பணம் கிடைக்காமல் தற்போது திண்டாடி வருகின்றனர்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, டெண்டர் குறித்து ஆய்வு நடந்து வரும் நிலையில், முடிந்த பணிகளுக்கு ஆன்லைன் டெண்டரில் சேர்த்து பணத்தை விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆய்வு
தற்போதுள்ள கவுன்சிலர்கள் சொல்வதை கேட்பதா, ஆளுங்கட்சியான த.வெ.க., நிர்வாகிகள் சொல்வதை கேட்பதா என தெரியாமல் திணறுகின்றனர். தற்போதுள்ள கவுன்சிலர்களின் ஆட்சிக்காலம் அக்டோபர் வரை உள்ளது.
வாலாஜாபாத் ஒன்றியத்தில் அரசு தொடக்கப் பள்ளி கட்டடத்திற்கு, குடிநீர் வசதி செய்து கொடுத்த ஒப்பந்ததாரருக்கு, 20 மாதங்களாகியும் அதற்கான பணம் விடுவிக்கப் படவில்லை.
அதேபோல, தேசிய ஊரக வேலை உறுதி யளிப்பு திட்டத்தில் செய்த சாலை, சிறுபாலங்கள் அமைத்த பணிகளுக்கும் பணம் விடுவிக்கப் படவில்லை.
காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் உள்ளிட்ட பல்வேறு ஒன்றியங்களில் நடந்த 100க்கும் மேற்பட்ட பணிகளுக்கு, 20 கோடி ரூபாய் வரை பணம் கிடைக்கவில்லை.
இதற்கு, பணிகள் முறையாக நடந்ததா என ஆய்வு செய்து, செய்த பணிகளுக்கான தொகையை விடுவிக்க அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேலை பறிபோகும்
இது குறித்து, காஞ்சி புரம் ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சாலை, குடிநீர் உள்ளிட்ட எந்த ஒரு வேலையாக இருந்தாலும், டெண்டர் விட்ட பிறகே செய்ய வேண்டும். அப்போது தான் செய்த வேலைக்குரிய பணம் கிடைக்கும். டெண்டர் வைக்காமல் பணி செய்வது, துறை அதிகாரிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.
பெரும்பாலான பணிகளுக்கு ஆன்லைன் டெண்டர் என்பதால், உயரதிகாரிகள் ஒப்புதல் பெற்ற பிறகே செய்ய வேண்டும். அரசியல்வாதிகளை நம்பி களத்தில் இறங்கினால், துறை அதிகாரிகளின் வேலை பறிபோகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
டிஜிட்டல் கிராப் சர்வேயில் பங்கேற்கவிவசாயிகள், இளைஞர்களுக்கு அழைப்பு
-
முருங்கை விலை சரிவு
-
திருநங்கைகளுக்கு ஹாஸ்டல் சமூக நலத்துறை நடவடிக்கை
-
'அட்மா' திட்டத்தில் நெல் சாகுபடி: ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி
-
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி விபரத்தை தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை; அமைச்சர் நிர்மல் குமார் எச்சரிக்கை
-
கேரளாவில் 2,000 சட்டவிரோத கடன் செயலி; 5,000 போலி இணையதளங்கள் முடக்கம்