கேரளாவில் 2,000 சட்டவிரோத கடன் செயலி; 5,000 போலி இணையதளங்கள் முடக்கம்

திருவனந்தபுரம்: 'ஆன்லைன்' மூலம் நடக்கும் நிதி மோசடிகளை தடுக்கும் வகையில், கேரளாவில் சட்டவிரோதமாக செயல்பட்ட 2,000 கடன் செயலிகள் மற்றும் 5,000க்கும் மேற்பட்ட போலி இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்தார்.

கேரளாவில் இணையதள குற்றங்களும், ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துள்ளதாகவும், இது போன்ற மோசடிகளில் நாட்டிலேயே மூன்றாவது இடத்தில் கேரளா உள்ளதாகவும் அம்மாநில சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., அபின் வர்கே குற்றஞ்சாட்டினார். அவர் மேலும் கூறியதாவது:

இணையதள குற்றங்களால் 42,000 பேர் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 814 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொகையில் பாதி இழப்பு ஆன்லைன் வர்த்தக செயலிகள் வாயிலாக ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து ரசீதுகள் மற்றும் மின் கட்டணம், காஸ் பில் செலுத்துவது போன்ற அன்றாட பயன்பாட்டு கட்டணங்களை செலுத்துவதிலும் இந்த மோசடி நடக்கிறது. இதற்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதில் அளித்து மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா கூறியதாவது:
மாநிலத்தில் இணையதள குற்றங்கள் பரவலாக உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் 1,000க்கும் மேற்பட்ட இணைய மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. இது தொடர்பாக கேரள போலீசார் தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கிய 1,836 கடன் செயலிகள் மற்றும் நிதிமோசடியில் ஈடுபட்ட 5,000க்கும் மேற்பட்ட போலி இணையதளங்கள் போலீசாரால் நீக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் விளையாட்டுக்களே பெரும்பாலும் நிதிமோசடிக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த மோசடிக்கு பெரும்பாலும் குழந்தைகள் இரையாகின்றனர். இதை தடுக்க பள்ளிகளில் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement