முருகன் கோவிலுக்கு மாற்று மலைப்பாதை பணிகள் காலதாமதம்! வனத்துறை அனுமதிக்காக பல மாதங்களாக காத்திருப்பு
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கடந்தாண்டு, 48 கோடி ரூபாய் மதிப்பில் மாற்று மலைப்பாதை திட்டம் கொண்டு வரப்பட்டு, அதற்கான பணிகளை கோவில் நிர்வாகம் தொடங்கியுள்ளது. இருப்பினும், அனுமதி கடிதம் வழங்காமல் வனத்துறை இழுத்தடிப்பதால், மாற்று மலைப்பாதை பணிகளை நெடுஞ்சாலை துறையினரிடம் ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
திருத்தணி முருகன் கோவிலுக்கு, தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
பெரும்பாலான பக்தர்கள் பேருந்து, வேன், கார், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள் மூலம், மலைக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
அரசாணை
இந்நிலையில், முருகன் மலைக்கோவிலுக்கு வாகனங்கள் வந்து செல்வதற்கு, ஒரே ஒரு மலைப்பாதை மட்டுமே உள்ளதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக, வார விடுமுறை நாட்கள், முகூர்த்த நாள் மற்றும் முக்கிய விழா ஆகிய நாட்களில், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதனால், ஒன்றரை கி.மீ., துாரத்தை கடக்க, இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. மேலும், பக்தர்கள் மலைப்பாதையில் நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, கடந்தாண்டு தி.மு.க., ஆட்சியில், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் தவிர்ப்பதற்கு, மாற்று மலைப்பாதை திட்டம் கொண்டு வருவதற்கு அரசாணை வெளியிட்டு, அதற்காக 48 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்தது.
மாற்று மலைப்பாதை, திருத்தணி - சித்துார் நெடுஞ்சாலையில், குமாரகுப்பம் பகுதியில் இருந்து, மேல்திருத்தணி வழியாக, 2 கி.மீ., துாரத்திற்கு அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டது.
386 மரங்கள்
அதாவது, தனியார் நபர்களிடம், இருந்து 2.65 ஏக்கர் நிலம், வனத்துறையின், 0.82 சென்ட் இடம், சாலை புறம்போக்கு 0.22 சென்ட், கால்வாய் புறம்போக்கு 0.29 சென்ட், கோவில் நிலம் 0.68 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
அதாவது, தனியார் நபர் நிலத்தில் 890 மீட்டர், வனத்துறை இடத்தில் 690 மீட்டர், சாலை புறம்போக்கு இடத்தில் 70 மீட்டர், கால்வாய் புறம்போக்கு நிலத்தில் 100 மீட்டர், கோவில் நிலத்தில் 250 மீட்டர் என, மொத்தம், 2 கி.மீ., நீளம், 12 மீட்டர் அகலத்தில் மாற்று மலைப்பாதை அமைகிறது.
இது குறித்து, திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முருகன் மலைக்கோவிலுக்கு அமைக்கப்படும் மாற்று மலைப்பாதைக்கு தேவையான நிலத்தை தனி நபர்கள், அரசு புறம்போக்கு மற்றும் வனத்துறை ஆகியோரிடம் இருந்து, நிலம் கோவில் பெயரில் கையகப்படுத்தப்பட்டது.
இதில், வனத்துறை நிலம் வழங்கிய இடத்தில், 386 மரங்கள் உள்ளன. இந்த மரங்களை வெட்டி எடுப்பதற்கும், 30 லட்சம் ரூபாய் மதிப்பீடு தயார் செய்து, அதற்கான தொகையை திருத்தணி வனத்துறையினரிடம் ஒப்படைக்க, கோவில் நிர்வாகம் தயாராக உள்ளது.
மரங்களை அகற்றி, சாலை அமைப்பதற்கு வனத்துறையினர் அனுமதி கடிதம் வழங்க வேண்டும். இக்கடிதம் வந்ததும், மாற்றுப் பாதை அமைக்கும் பணி, திருத்தணி நெடுஞ்சாலை துறையினரிடம் ஒப்படைக்கப்படும்.
சிக்கல்
இப்பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க நெடுஞ்சாலை துறையினர் தீர்மானித்துள்ளனர். ஆனால், வனத்துறையினர் அனுமதி கடிதம் வழங்குவதில் காலதாமதம் ஆகிறது.
அதனால், மாற்று மலைப்பாதை அமைக்கும் பணியை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், விரைவில் மாற்றுப் பாதை அமைக்கும் பணி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
@block_B@ போக்குவரத்து நெரிசலுக்கு 'குட்பை'
முருகன் மலைக்கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைத்தால், பெங்களூரு, குடியாத்தம், கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணாமலை, சித்துார், ராணிபேட்டை, சோளிங்கர், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை போன்ற இடங்களில் இருந்து, திருத்தணி முருகன் கோவிலுக்கு வாகனங்கள் மூலம் வரும் பக்தர்கள், திருத்தணி நகருக்குள் உள்ளே வராமல், மேல்திருத்தணி வழியாக நேரடியாக மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை தரிசிக்கலாம். மேலும், அதே வழியில் மேற்கண்ட இடங்களுக்கு செல்லலாம். இதனால், திருத்தணி ம.பொ.சி., சாலை, அரக்கோணம் சாலை, மலைப்பாதை மற்றும் சித்துார் சாலை ஆகிய இடங்களில், போக்குவரத்து நெரிசல் இருக்காது. இதனால், விபத்துகளும் தவிர்க்கப்படும்.block_B
மேலும்
-
டிஜிட்டல் கிராப் சர்வேயில் பங்கேற்கவிவசாயிகள், இளைஞர்களுக்கு அழைப்பு
-
முருங்கை விலை சரிவு
-
திருநங்கைகளுக்கு ஹாஸ்டல் சமூக நலத்துறை நடவடிக்கை
-
'அட்மா' திட்டத்தில் நெல் சாகுபடி: ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி
-
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி விபரத்தை தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை; அமைச்சர் நிர்மல் குமார் எச்சரிக்கை
-
கேரளாவில் 2,000 சட்டவிரோத கடன் செயலி; 5,000 போலி இணையதளங்கள் முடக்கம்