தரங்கம்பாடி அருகே காதலர்கள் சடலமாக கண்டெடுப்பு; ஆணவக்கொலை என ஒரு தரப்பு புகார்

2

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில், காதல் ஜோடி துாக்கிட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். இருவரையும் பெண் வீட்டார் கொன்று விட்டதாக, ஒரு தரப்பினர் புகார் எழுப்பியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பார்த்திபன், 19. கொத்தனார் வேலை பார்த்து வந்தார். அருகேயுள்ள சாத்தங்குடியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் நேற்று இரவு தன்னை ஜாதியை சொல்லி திட்டி அடித்து விட்டதாக காதலியின் தகப்பனார் உள்ளிட்டோர் மீது பார்த்திபன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். இன்று காலை 6 மணிக்கு சிறுமியின் தந்தை தனது மகளைக் காணவில்லை என்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் பார்த்திபனின் செல்போன் டவர் லொகேஷனை சோதனை செய்தபோது சாத்தங்குடியில் உள்ள குமரவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தை காண்பித்துள்ளது. அங்கு சென்று போலீசார் பார்த்தபோது காதலர்கள் இருவரும் துாக்கிட்ட நிலையில் சடலமாகி இருந்தனர்.
சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க ஏடிஎஸ்பி சுரேஷ், டிஎஸ்பி சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இருவரது உடலையும் போலீசார் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். பெண் வீட்டார் ஆணவக் கொலை செய்து விட்டதாக வாலிபரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனிடையே உயிரிழந்த சிறுமியின் உறவினர்களின் வாகனங்கள் மற்றும் வீட்டை எதிர்தரப்பினர் உடைத்து சேதப்படுத்தினர். இரு கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement