தமிழகத்திலும் ஒருங்கிணைந்த சூரியசக்தி மின்சார கொள்கை அமைச்சர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்களில், அதிக முதலீட்டை ஈர்க்க, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்களை போல், ஒருங்கிணைந்த சூரியசக்தி மின்சார கொள்கையை உருவாக்குமாறு, மின் வாரிய அதிகாரிகளுக்கு, மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களை, அதிகஅளவில் அமைக்க சாதகமான சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக, அமைச்சர் நிர்மல்குமார், சென்னையில் நேற்று, உயர் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

இதில் எரிசக்தி துறை செயலர் அனில் மேஷ்ராம், மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது:

புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள, ஐந்து புதுப்பிக்கத்தக்க மின்சார மண்டலங்களின் நோக்கங்களை விரைவாக நிறைவேற்ற வேண்டும். மின் நுகர்வோர் குறைதீர் அமைப்பை நவீனமயாக்குவதுடன், சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களின் கோரிக்கைகள், புகார்களை கேட்டறிந்து, விரைவாக தீர்வு காண வேண்டும்.

புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்களில் முன்னணியில் உள்ள மஹாராஷ்டிரா உள்ளிட்ட, பிற மாநில மின் நிறுவனங்களை போல், தமிழகத்தில் ஒருங் கிணைந்த சூரியசக்தி மின் கொள்கையை உருவாக்கி, 'பேட்டரி ஸ்டோரேஜ்' உள்ளிட்ட திட்டங்களில், அதிக முதலீடுகளை ஈர்க்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Advertisement