நெடுஞ்சாலையை ஒட்டிய மனையை வாங்குவதால் என்ன பிரச்னை?

சென்னை போன்ற நகரங்களில் வீட்டின் விலை வெகுவாக அதிகரித்து வரும் நிலையில், காலி மனை வாங்கலாம் என பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். தனி வீடு வாங்க முடியாத நிலையில் காலி மனை வாங்கினால் லாபமாக இருக்கும் என்று மக்கள் நினைக்கின்றனர்.

இதற்கு உதவும் வகையில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முறையான அங்கீகாரத்துடன் மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்துகின்றன. இத போன்ற திட்டங்களில் மனை வாங்கும் போது குறிப்பிட்ட சில விஷயங்களில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

நீங்கள் தேர்வு செய்யும் மனை எந்த இடத்தில், எப்படி அமைந்துள்ளது என்ற விஷயத்தை முதலில் தெளிவாக கவனியுங்கள். இதில் இயல்பாகவே, பிரதான சாலைகளை ஒட்டிய மனைகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

போக்குவரத்து வசதிகள் அதிகம் இருக்கும், எளிதாக வந்து செல்லலாம், எதிர்காலத்தில் மதிப்பு வெகுவாக அதிகரிக்கும் என்பது போன்ற காரணங்களால் மக்கள் இதை விரும்புகின்றனர். ஒரு வகையில் பார்த்தால் இந்த விஷயங்கள் அனைத்தும் உண்மை தான் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், இது போன்ற மனைகளை வாங்குவோர் எதிர்காலத்தில் குறிப்பிட்ட சில பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக, தேசிய, மாநில, மாவட்ட நெடுஞ்சாலையை ஒட்டிய மனைகள் இயல்பாகவே அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

இவ்வாறு அதிக விலை கொடுத்து மனை வாங்கியவர்கள் அதில் கூடுதல் லாபத்தை அடைய வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால், நகர்ப்புற வளர்ச்சி காரணமாக நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.

இதன்படி, நீங்கள் மனை வாங்கிய பகுதியில் சாலை விரிவாக்கம் என்று வரும் போது உங்கள் மனை தான் முதலில் பாதிக்கப்படும். இது போன்ற திட்டங்களுக்கு நிலத்தை கையகப்ப டுத்தும் போது உரிய இழப்பீடு வழங்குவார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை.

சில சமயங்களில் இத்தகைய இழப்பீடுகள் வாயிலாக பல குடும்பங்கள் பெரிய அளவில் வசதி அடைந்துள்ளதையும் பார்க்கிறோம். ஆனால், ஆசையாக வாங்கிய நிலத்தை தொடர்ந்து பயன்படுத்த முடியாமல் போகும் எனன்பதையும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நீங்கள் மனை வாங்கும் போது அது அதிக போக்குவரத்து வசதிகள் உள்ள பகுதிக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். போக்குவரத்து கட்டமைப்பு திட்டங்களில் இருந்து சற்று தொலைவில் இருந்தால் பாதுகாப்பான சூழல் ஏற்படும்.

எனவே, புதிதாக மனை வாங்கும் போது அது எத்தகைய பகுதியில், எப்படி அமைந்துள்ளது என்று பாருங்கள். தேசிய, மாநில, மாவட்ட நெடுஞ்சாலை ஓரங்களில் மனை வாங்கும் நிலையில், எதிர்கால விளைவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்கின்றனர் நகரமைப்பு துறை வல்லுநர்கள்.

நீங்கள் மனை வாங்கும் போது அது அதிக போக்கு வரத்து வசதிகள் உள்ள பகுதிக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள், இதுவே எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

Advertisement