ஆன்லைன் முறையில் பட்டா பதிவிறக்கம் செய்வது எப்படி?
இன்றைய சூழலில், எப்படியாவது தங்கள் பெயரில் வீடு, அல்லது மனையை வாங்கிவிட வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். இதை நிறைவேற்றுவதற்காக கடுமையாக உழைத்து பணத்தை சேமிக்கின்றனர்.
கடுமையாக பாடுபட்டு சேர்க்கும் பணத்தை பயன்படுத்தி சொத்து வாங்கும் போது, அதில் தொடர்ச்சியாக எடுக்க வேண்டிய விஷயங்களையும் பார்க்க வேண்டும். குறிப்பாக, ஒரு சொத்தை தேர்வு செய்து வாங்குவதற்கான பத்திரப்பதிவு செய்தால் போதும் என்று மக்கள் நினைக்கின்றனர்.
பத்திரப்பதிவுக்கு அப்பால் அந்த சொத்துக்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பதில் பெரும்பாலான மக்கள் கவனம் செலுத்துவதில்லை. சில ஆண்டுகள் முன்புவரை பட்டா தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு இல்லாத சூழல் நிலவியது.
ஆனால், தற்போது அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளால் பட்டா பெயர் மாற்றத்துக்கு மக்கள் தொடர் முயற்சி மேற்கொள்கின்றனர். இந்நிலையில், கடந்த, 2000ம் ஆண்டுக்கு பின் வழங்கப்படும் பட்டாக்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் கிடைக்கின்றன.
ஒரு சொத்து விற்பனைக்கு வரும் நிலையில், அதன் உரிமையாளர் காட்டும் பட்டா உண்மையா என்பதை மக்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் முறையில் சரி பார்க்கலாம். வருவாய் துறையின் https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்துக்கு சென்று பட்டா விபரங்களை பார்க்கலாம்.
இந்த இணையதளத்தில் சென்று, பட்டா, சிட்டா, புலப்பட விபரங்கள் பார்க்க என்ற தலைப்புக்குள் செல்ல வேண்டும். இதில், சொத்து அமைந்துள்ள பகுதி ஊரகம், நகர்ப்புற என்பதில் சரியானதை தேர்வு செய்ய வேண்டும்.
அங்கு நீங்கள் வாங்கும் சொத்து அமைந்துள்ள மாவட்டம், தாலுகா, கிராமம் ஆகிய விபரங்களை தேர்வு செய்ய வேண்டும். இதன்பின் ஊரகம், நத்தம் என்பதில் ஒன்றை தேர்வு செய்து, சர்வே எண், பட்டா எண் ஆகியவற்றில் உரிய தகவல்களை பதிவிட வேண்டும்.
இதையடுத்து, உங்கள் மொபைல் போன் எண்ணை பதிவிட வேண்டும். அந்த எண்ணுக்கு சில நிமிடங்களில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய ரகசிய குறியீடு எண் வடிவில் வரும். அதை கணினியில் செலுத்தினால், உறுதிப்படுத்த கேட்கும்.
இதுற்கு நீங்கள் ஒப்புதல் அளித்தால் அடுத்த சில நிமிடங்களில் பட்டா விபரங்கள் கணினி திரையில் காட்சிப்படுத்தப்படும், அத்துடன் நில அளவை வரைபடமும் இணைக்கப்பட்டு இருக்கும். இதை கணினியில் பதிவிறக்கம் செய்து, தேவையான பிரதிகள் எடுத்து பயன்படுத்தலாம் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.
கடந்த, 2000ம் ஆண்டுக்கு பின் வழங்கப்படும் பட்டாக்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் கிடைக்கின்றன பொது மக்கள் எளிதாக பயன்படுத்திக் கொள்ளலாம்