சொத்து பிரச்னையில் அண்ணனை தாக்கிய வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராக தமிழக அமைச்சருக்கு உத்தரவு
புதுச்சேரி: சொத்து பிரச்னையில் வீடு புகுந்து சொந்த அண்ணன் மற்றும் அண்ணியை தாக்கி, மானபங்கப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்த தமிழக நிதி அமைச்சர் இன்று புதுச்சேரி கோர்ட்டில் இன்று கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக வெற்றி கழகம் சார்பில், ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரிய வில்சன், தற்போது தமிழக நிதியமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவரும், இவரது தந்தை நெஸ்தோர் ஆகியோர் சொத்து பிரச்னை காரணமாக கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி இரவு 8 மணிக்கு புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது அண்ணன் மரிய குலோத்; வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அண்ணன் மரியகுலோத், அண்ணி கெரோலின் ஆகியோரை ஆபாசமாக திட்டி, உருட்டு கட்டையால் தாக்கினர்.
மேலும், கெரோலின் ஆடைகளை பிடித்து இழுத்து மானப்பங்கப்படுத்தி, நாங்கள் நடத்தி வரும் செயின்ட் ஆண்டனி பள்ளி நிர்வாகத்தில் தலையிட்டால், குடும்பத்தோடு கொலை செய்துவிடுவோம் என, மிரட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
படுகாயமடைந்த மரிய குலோத் மற்றும் கெரோலினா சிகிச்சை பெற்ற பின், லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் லாஸ்பேட்டை போலீசார், வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல், தாக்குதல், சொத்திற்கு சேதம் விளைவித்தல், ஆபத்தான ஆயுதத்தால் காயம் ஏற்படுத்துதல், பெண்ணை மானப்பங்கப்படுத்துதல், கொலை மிரட்டல் மற்றும் கூட்டுச் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, மரிய வில்சன், நெஸ்தோர் ஆகியோரை கைது செய்து ஜாமினில் விடுவித்தனர்.
இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக பலமுறை வாய்தா வழங்கப்பட்ட போதிலும், மரிய வில்சன் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. கடந்த மாத வாய்தாவின்போதும், மரிய வில்சன் ஆஜராகவில்லை.
இவ்வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றப்பத்திரிகையை நேரில் பெற்றுக்கொள்வதற்காக ஜூலை 4ம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என, மாஜிஸ்திரேட் சேரலாதன் உத்தவிட்டுள்ளார்.
அதனால், இன்று நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்
-
ஆன்லைன் முறையில் பட்டா பதிவிறக்கம் செய்வது எப்படி?
-
சட்டப்பூர்வ ஆய்வு இல்லாமல் சொத்து வாங்குவது நல்லதல்ல!
-
பாட்டி கொடுத்த சொத்தில் பேத்தியின் கணவர் உரிமை கோர முடியாது!
-
எந்த இடத்தில் என்ன வகை சிமென்டை பயன்படுத்த வேண்டும்?
-
நெடுஞ்சாலையை ஒட்டிய மனையை வாங்குவதால் என்ன பிரச்னை?
-
வீடு கட்டுவோர் கட்டடத்தின் பாகங்கள் குறித்து அறிய வேண்டியவை!