192 மணி நேர கான்கிரீட் சிறை... மரணத்தை வென்று மீண்ட மனிதன்:



கண்ணிமைக்கும் நேரத்தில் பேரழிவு ஒட்டுமொத்த நகரத்தையும் விழுங்கிவிடும்போது, சில நேரங்களில் மரண சாசனத்தையும் மீறி சில அற்புதங்கள் நிகழ்கின்றன. அப்படியான ஒரு நெகிழ்ச்சியான அற்புதம் தான் தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நிகழ்ந்துள்ளது.

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் 2,500-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கியுள்ளன. 50,000-க்கும் அதிகமான மக்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் மாயமாகி, தேடப்பட்டு வருகின்றனர். எங்குப் பார்த்தாலும் மரண ஓலமும், கான்கிரீட் இடிபாடுகளுமாக இருந்த லா குவைரா மாகாணத்தில் தான் அந்தப் பெருநிகழ்வு சாத்தியமானது.
Latest Tamil News
எர்னான் ஆல்பெர்டோ கில் புளோரஸ் (43) என்ற காவலாளி, நிலநடுக்கம் ஏற்பட்டபோது தனது சிறிய பாதுகாப்புக் கேபினுக்குள் இருந்தார். சுற்றியிருந்த 140 டன் கணத்த கான்கிரீட் சுவர்கள் சரிந்து விழுந்தபோதும், அதிர்ஷ்டவசமாக அவரது கேபின் மட்டும் உடையாமல் ஒரு பாதுகாப்புக் கூண்டாக மாறியது. இருள், உணவு இல்லை, குடிக்க ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லை... மரணம் அவரைச் சுற்றித் தாண்டவமாடியது.

பொதுவாக ஒரு மனிதன் தண்ணீரின்றி 3 முதல் 4 நாட்கள் மட்டுமே உயிர்வாழ முடியும் என்ற மருத்துவ விதியை, எர்னானின் வாழ்வாசை பொய்யாக்கியது. ஐந்து நாட்கள் (120 மணி நேரம்) பசியோடும் தாகத்தோடும், தன் குடும்பத்தின் நினைவுகளை மட்டுமே பிடித்துக்கொண்டு இருளுக்குள் உயிருக்குக் போராடினார்.
Latest Tamil News
கோஸ்டாரிகா நாட்டு ரெட் கிராஸ் அமைப்பினர் அதிநவீன கருவிகள் மூலம் எர்னான் உயிருடன் இருப்பதை 5-வது நாள் கண்டறிந்தனர். அடுத்த சில நிமிடங்களில், எல்லாக் கூட்டுப் பகைகளையும் மறந்து சிலி, அமெரிக்கா, போர்ச்சுக்கல், மெக்சிகோ, எல் சால்வடார் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மீட்புக் குழுவினர் அங்கே குவிந்தனர்.

அவரிடம் பேசுவதற்காக ஒரு சிறிய துளையிடப்பட்டது. டெலிஸ்கோபிக் கேமரா மூலம் எர்னானின் முகம் தெரிந்ததும் மீட்புக்குழுவினர் கண்ணீர் விட்டனர். அந்தச் சிறிய குழாய் மூலமாகவே கடந்த 3 நாட்களாக அவருக்குத் தண்ணீரும், திரவ ஊட்டச்சத்துகளும் தடையின்றி வழங்கப்பட்டு, அவரது உயிர் காக்கப்பட்டது.

சுமார் 100 மணி நேரத் தொடர் போராட்டத்தின் முடிவில், ஆக்சிஜன் கவசத்துடன் எர்னான் பத்திரமாக வெளியே கொண்டு வரப்பட்டார். சரியாக 192 மணி நேரம் (8 நாட்கள்) கான்கிரீட் சிறைக்குள் இருந்து அவர் ஒளியை நோக்கி வந்த அந்த நொடி, அங்கிருந்த பல்வேறு நாடுகளின் மீட்புக் குழுவினர் தங்களின் மொழி, இனம் மறந்து ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து, கண்ணீருடன் கைதட்டி தங்களின் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.
Latest Tamil News
வெளியே வந்த எர்னான் கண்ணீருடன் பேசுகையில், "ஒவ்வொரு நொடியும் இருளுக்குள் என் மனைவியும் பிள்ளைகளும் மட்டுமே என் கண்ணுக்குத் தெரிந்தார்கள். அவர்களுக்காக வாழ வேண்டும் என்று கடவுளிடம் கதறினேன். 5-வது நாள் அந்தச் சிறிய துளையின் வழியே மனிதர்களின் குரலும், வெளிச்சமும் வந்தபோது எனக்கு மறுபிறவி கிடைத்தது. அந்தத் துளையின் வழியே வந்த ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரும் எனக்கு அமிர்தமாக இருந்தது. மனிதநேயம் இன்னும் சாகவில்லை என்பதை என் உயிர் உணர்த்தியிருக்கிறது" என்று நாத்தழுதழுக்கக் கூறினார்.

மரணத்தின் வாயிலைத் தொட்டுவிட்டு, மனிதநேயத்தின் கரங்களைப் பிடித்து மீண்டு வந்திருக்கும் எர்னானின் இந்த உயிர் மீட்பு, உலகிற்குப் புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது.

----எல்.முருகராஜ்

Advertisement