இந்தியா காட்டும் வழியை மனித குலம் பின்பற்ற வேண்டும்: மோகன் பாகவத்

4

நாக்பூர்: '' இந்தியா உலகிற்கு வழிகாட்டும். அதனை மனித குலம் கட்டாயம் பின்பற்ற வேண்டும்,'' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறினார்.



மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: உள்நாட்டில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் வருபவர்கள் சங்கத்தை அறிந்த பிறகு ஒரே பதிலைத்தான் சொல்கின்றனர். ஐந்து கண்டங்களில் இருந்தும் வரும் ஒவ்வொருவரும் இதனைத்தான் சொல்கின்றனர். எங்கள் நாட்டு இளைஞர்களுக்கும் இதேபோன்ற பயிற்சியை எங்களுக்கும் வழங்க வேண்டும் எனக் கேட்கின்றனர்.


இந்த பயணம் தொடர்கிறது. இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. குணநலன்களை மட்டும் கட்டமைப்பதுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பணி நின்றுவிடுவது இல்லை. இன்றும் இந்தியா வழிகாட்டும். அந்தப் பாதையை உலகம் பின்பற்றும் என உலக நாடுகள் எழுத்துகள் வாயிலாகவும், உரை மூலமும் ஒப்புக் கொண்டுள்ளன. இருப்பினும், இந்த அடித்தளத்தின் மீது முன்னேறி புகழும், வலிமையும் கொண்ட நாடாக இந்தியா மாறும்போது மட்டுமே இது சாத்தியமாகும்.


தாய்நாட்டிற்காக சேவை செய்ய வேண்டும் என நாங்கள் சுயமாக சபதம் எடுத்துள்ளோம். உண்மையான சேவகர்களாக மாற நாங்கள் தொடர்ந்து பாடுபடுகிறோம். ஒரு சுயம் சேவகர் ஆக மாறுவதற்கான முழு நிறைவை அடைவதற்கு எல்லை இல்லை. அதன் உச்சத்தை டாக்டர் ஹெட்கேவாரின் வாழ்க்கையில் நாங்கள் கண்டோம். அதற்கு தொடர்ச்சியான சாதனை தேவை. அத்தகைய தொடர்ச்சியான சாதனையை சுகபோக வாழ்க்கையின் மூலம் அடைந்துவிட முடியாது.


உலகளாவிய இலக்கை நிறைவேற்றி, அதைச் செய்யத் திறனுள்ள நாடாக இந்தியா உருவெடுக்க வேண்டுமானால், அதுவே அந்த லட்சியத்தின் வாழும் வடிவமாக மாற வேண்டும். அப்படித்திகழ, இந்திய மக்களும் தனிநபர்களும், தங்கள் நடத்தையின் வாயிலாக உலகிற்கு வெளிப்படுத்த வேண்டிய வாழ்க்கை முறையையே பின்பற்ற வேண்டும். இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.

Advertisement