விபத்துகளை கட்டுப்படுத்த சாலை பராமரிப்பில் கவனம் அவசியம்; அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

1

சென்னை: 'விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில், சாலைகளை பராமரிக்க வேண்டும்' என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில், நெடுஞ்சாலைத்துறை ஆய்வு கூட்டம், முதல்வர் விஜய் தலைமையில் நேற்று நடந்தது.

இதில், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரியவில் சன், தலைமை செயலர் சாய்குமார், நிதித்துறை செயலர் சித்திக், நெடுஞ்சாலைத்துறை செயலர் எஸ்.ஜே.சிரு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், நெடுஞ் சாலை பராமரிப்பு தொடர்பாக, பல்வேறு ஆலோசனைகளை, முதல் வர் விஜய் வழங்கிஉள்ளார்.

இதுகுறித்து, நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

தமிழக நெடுஞ்சாலைத் துறை வாயிலாக, 66,000 கி.மீ.,க்கு மேல் சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதில், சில தேசிய நெடுஞ்சாலைகளும் அடக்கம். தமிழகத்தில் அதிக சாலை விபத்து மரணங்கள் நடப்பது குறித்து, முதல்வர் விஜய் வருத்தம் தெரிவித்தார்.

இனிவரும் காலங்களில், சாலை விபத்துக்களை குறைக்க வேண்டும். எனவே, சாலை பராமரிப்பு பணிகளில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

விபத்து அதிகம் நடக்கும் இடங்களை கண்டறிந்து, அதிக ஆபத்துள்ள சாலைகளில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

சென்னையில் உள்ள சாலைகளை தரமாக அமைப்பது குறித்தும், முதல்வர் அறிவுறுத்தினார். தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இரும்பு மேம்பால கட்டுமான பணிகள், மதுரவாயல் - துறைமுகம் இரண்டடுக்கு மேம்பால பணிகள் குறித்தும், முதல்வரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

இப்பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்குமாறு முதல்வர் கூறினார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement