இழப்பீடு தராத கட்டுமான நிறுவனம்: சொத்து முடக்க ஆணையம் உத்தரவு

சென்னை: வீடு ஒப்படைப்பதில் தாமதமான வழக்கில், பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு தராத கட்டுமான நிறுவனத்தின் சொத்தை முடக்க, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கிண்டி தொழிற்பேட்டையில், வி.ஜி.என்., டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வருகிறது. இதில் வீடு வாங்க கார்த்திகேயன், 1.13 கோடி ரூபாய்; விஸ்வநாதன் கல்யாணசுந்தரம், 1.16 கோடி ரூபாய்; நவநீத கிருஷ்ணன், 1.15 கோடி ரூபாய் செலுத்தினர்.

குறிப்பிட்ட காலத்தில் கட்டுமான நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை. இதுகுறித்த புகாரை விசாரித்த ரியல் எஸ்டேட் ஆணையம், மனுதாரர்கள் செலுத்திய தொகையை வட்டியுடன் திருப்பித்தரும்படி, 2023 ஜன., 30ல் உத்தரவிட்டது.

இந்த பணத்தை கட்டுமான நிறுவனம் தராததால், மனுதாரர்கள் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் மீண்டும் முறையிட்டனர்.

இதை விசாரித்த ரியல் எஸ்டேட் ஆணைய உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜெகநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:

கலெக்டர், கட்டுமான நிறுவனத்திற்கு, 'வாரன்ட்' பிறப்பித்து, மனுதாரர்களுக்கான பணத்தை வசூலிக்கலாம். நிறுவனத்தின் கட்டுமான திட்டத்தில் உள்ள மூன்று வீடுகளை முடக்க நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement