'தமிழகத்தில் ரூ.22 ஆயிரம் கோடி சுற்றுலா முதலீடுகள் என்னாச்சு'

மதுரை: தமிழகத்தை சர்வதேச சுற்றுலா மையமாக மாற்றும் நோக்கில், நடத்தப்பட்ட உலக சுற்றுலா மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ரூ.22 ஆயிரம் கோடி மதிப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள் எந்த நிலையில் உள்ளது என்ற கேள்வி சுற்றுலா ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த தி.மு.க., ஆட்சியில் மாமல்லபுரத்தில் சுற்றுலா துறை சார்பில், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு இந்தாண்டு பிப்ரவரியில் நடந்தது. அதில் சுற்றுலா, தொழில் துறையுடன் இணைந்து 127 தனியார் நிறுவனங்களுடன் ரூ.22,794 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதன் மூலம் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 31 இடங்களில் புதிய சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படும்; மாமல்லபுரத்திற்கு சிறப்பு பகுதி மேம்பாட்டு ஆணையம் அமைத்து ரூ.100 கோடியில் உலகத்தர சுற்றுலா கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் மாநாடு முடிந்து பல மாதங்கள் கடந்த நிலையில், கையெழுத்தான ஒப்பந்தங்களில் எத்தனை திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன, எத்தனை நிறுவனங்கள் முதலீட்டை தொடங்கியுள்ளன, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளன என்ற விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. அறிவிக்கப்பட்ட 31 புதிய சுற்றுலா மையங்கள் எந்தெந்த பகுதிகளில் அமைய உள்ளன, அவற்றுக்கான நிலத் தேர்வு, திட்ட அறிக்கை, நிதி ஒதுக்கீடு போன்ற பணிகள் எந்த நிலையில் உள்ளன என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சுற்றுலா ஆர்வலர்கள் கூறியதாவது: மாநாடுகளில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்கள் எந்த நிலையில் உள்ளன என அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும். அப்போது மட்டுமே முதலீட்டாளர்கள், மக்களிடம் நம்பிக்கை அதிகரிக்கும். சுற்றுலா திட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் ஓட்டல், போக்குவரத்து, கைவினை பொருட்கள், உள்ளூர் தொழில்கள் என ஆயிரக்கணக்கானோருக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆட்சி மாற்றத்தை காரணம் காட்டாமல், அறிவிப்புகளை செயல்பாடுக ளாக மாற்றும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றனர்.

Advertisement