சங்கங்கள் கருத்து கேட்டு அரசு காப்பீட்டு திட்டத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: ஓய்வூதியர்கள் போர்க்கொடி

மதுரை: தமிழக அரசு புதிய காப்பீட்டுத் திட்டம் தொடர்பான உத்தரவை ரத்து செய்து சங்கங்கள் கருத்து கேட்டு திட்டத்தை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன், பொதுச் செயலாளர் மகாலிங்கம் தெரிவித்துள்ளதாவது:

தமிழக அரசின் ஓய்வூதியருக்கான காப்பீட்டுத் திட்டத்தில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. இதுகுறித்து தமிழக அரசுக்கு தொடர்ந்து தெரியப்படுத்தி வருகிறோம். எந்த நடவடிக்கையும் இல்லை. சங்கங்கள் கோரிக்கையை கேட்டு இத்திட்டத்தை புதுப்பிக்க வேண்டும், பிரீமியத் தொகையை உயர்த்தக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. ஆனால் அவசர கதியில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு உத்தரவில் கட்டணமில்லா சிகிச்சைக்கு மாறாக 'பேக்கேஜ்' அடிப்படையில் சிகிச்சை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எவ்வளவு வழங்கப்படும் என்ற தெளிவு இல்லை. இந்த பேக்கேஜ் முறை காப்பீட்டு நிறுவன லாபத்திற்கானதாக உள்ளது. முந்தைய காப்பீட்டு திட்டத்தில் 30 முதல் 40 சதவீதம் காப்பீட்டு தொகை மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் புதிய திட்டத்தில் 15 முதல் 25 சதவீதமே பெறமுடியும் என தெரிகிறது. அறுவை சிகிச்சைக்கு இணையாக மெடிக்கல் மேனேஜ்மென்ட் சிகிச்சைக்கு குறைந்த அளவே தொகை அனுமதிக்கப்படுகிறது.

கண்புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.30 ஆயிரம் உச்சவரம்பு நிர்ணயம் இருந்தது. பேக்கேஜ் முறையில் ரூ.13 ஆயிரம் மற்றும் லென்ஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் ஆஞ்சியோ பிளாஸ்ட், எலும்பு முறிவு, தலைக்காய சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கு காப்பீட்டு தொகை குறைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியாக உள்ளது.

பேக்கேஜ் தொடர்பான புதிய உத்தரவை மருத்துவத்துறை இயக்குநர், மருத்துவக் கல்வித் துறை இயக்குநர் ஒப்புதல் அளித்துள்ளனர். மனசாட்சியுள்ள யாரும் இதுபோன்ற உத்தரவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டார்கள். இந்த பேக்கேஜ் திட்டம் முழுவதும் காப்பீட்டு நிறுவனம் தயாரித்த திட்டமாக உள்ளது. எனவே சங்கங்கள் கருத்துக்களை கேட்டு இத்திட்டத்தை மறுஆய்வு செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Advertisement