வணிகவரி சுழற்சிப்படையில் பெண் அலுவலர்கள் அவதி; இணை கமிஷனர்கள் நடவடிக்கை எடுப்பரா

மதுரை: வணிக வரித்துறையில் நெடுஞ்சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபடும் சுழற்சிப் படையில் (ரோயிங் ஸ்குவாட்) பெண் பணியாளர்களையே நியமித்துள்ளதால், அவர்கள் சிரமப்படுகின்றனர்.

மதுரை வணிக வரித்துறையில் பறக்கும் படையைப் போல 'சுழற்சிப்படை' என்ற அமைப்பு உள்ளது. வணிகவரித் துறையின் அமலாக்க பிரிவின் கீழ் செயல்படும் இந்த அமைப்பில் மதுரை மாவட்டத்தில் 3 படையும், திண்டுக்கல், தேனியில் தலா ஒரு படையும் உள்ளன. ஒரு படையில் 2 துணை வணிகவரி அலுவலர்கள், ஒரு டிரைவர் இருப்பர்.

வாகனத்தில் வலம் வரும் இப்படையினர் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையும், இரவில் மற்றொரு படையும் வலம் வருவர். ஆவணங்கள் சரியாக உள்ளதா என சரக்கு வாகனங்களை சோதனை செய்வர். இப்பணியில் சமீபத்தில் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். அதில் டிரைவரை தவிர மற்றவர்கள் பெண்கள். இவர்கள் பகல், இரவில் வாகன சோதனைகளுக்கு செல்வதால் பல இடையூறுகளை சந்திக்க வேண்டியுள்ளது. வாகனங்களை கண்காணிக்க ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும் நின்று கவனிக்க வேண்டியுள்ளது. இதனால் பாதுகாப்பு இல்லாத நிலையை உணர்கின்றனர்.

வணிகவரி பணியாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: சுழற்சிப் படையில் இரவு, பகல் பாராமல் வாகன ஆய்வில் ஈடுபடுகின்றனர். இப்பணியில் உள்ள பெண்கள் இயற்கை உபாதையை கழிக்கக்கூட சிரமப்படுகின்றனர். இரவு நேர சோதனையில் மது அருந்தி வரும் ஓட்டுனர்களுடன் வாக்குவாதம், தகராறு ஏற்படும் சூழலும் உள்ளது. வாகனங்கள் பிடிபட்டால், அதன் உரிமையாளர்கள், தணிக்கையாளர்கள் வரும்வரை அவ் வாகனத்துடன் பெண் அதிகாரிகளும் காத்திருக்கும் நிலை உள்ளது.

மேலும் கடைகள், வணிக நிறுவனங்களுக்கு ஆய்வுக்கு செல்லும் பெண் துணை மாநில வரி அலுவலர்களையும், இப்பணிக்கு அனுப்புகின்றனர். ஆட்கள் பற்றாக்குறை இருந்தால் அனுபவம் மிக்க மாநில வரி அலுவலர்களை சுழற்சிப் படையில் ஈடுபடுத்தலாம். வணிகவரி மற்றும் அமலாக்கப் பிரிவு இணை கமிஷனர்கள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement