லஞ்ச ஒழிப்பு ரெய்டில் சுவாரஸ்யம்; குப்பைத் தொட்டியில் பதுக்க முயன்ற பணம் பறிமுதல்

5

கோவை: தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் லஞ்ச புகார்கள் அதிகரித்து வந்த நிலையில், கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினர்.

வரைபட அனுமதி, சொத்து வரி பெயர் மாற்றம், பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்பு, கட்டட நிறைவு சான்றிதழ், மின்சார இணைப்புக்கான தடையில்லா சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்குவதற்கு, பொதுமக்களிடம் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்தது. அதன்படி, கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி., ராஜேஷ் தலைமையில், மூன்று இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒன்பது போலீசார் கொண்ட குழு, திடீர் சோதனையில் ஈடுபட்டது.

ஒரே நேரத்தில் 'ரெய்டு'



பொதுவாக மாலை நேரத்தில் அலுவலகப் பணிகள் நிறைவடையும் நேரமாக இருப்பதால், அப்போது பணப் பரிவர்த்தனைகள் நடைபெற வாய்ப்புள்ளதாக கருதி சோதனை மேற்கொள்ளப்பட்டது. நகர அமைப்பு பிரிவு, பொறியாளர் பிரிவு, நிர்வாக பிரிவு உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களில், ஒரே நேரத்தில் போலீசார் ஆய்வு நடத்தினர். அலுவலகங்களில் இருந்த ஆவணங்கள், கோப்புகள் மற்றும் பணப் பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டன.

மத்திய மண்டல தலைவர் மீனா லோகுவின் உதவியாளர் மற்றும் அங்கு இருந்த கலெக்டர் அலுவலக பெண் அலுவலர் ஒருவரிடம் விசாரணை நடத்தினர். மாலை 6.30 மணி அளவில் அலுவலகத்தில் பணம் தொடர்பில்லாத பெண் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வெளியே அனுப்பப்பட்டனர். தொடர்ந்து இரவு 8:00 மணி வரை சோதனை நீடித்தது.

அப்போது அலுவலக வளாகத்தில் இருந்த குப்பைத் தொட்டியில் பணத்தை மறைத்து வைக்க முயன்ற, அலுவலக உதவியாளரிடம் இருந்து கணக்கில் வராத, 12 ஆயிரத்து 200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பில் கலெக்டர்கள் மற்றும் பிற அலுவலர்களிடம் இருந்த பணத்திற்கான விவரங்களும் சரிபார்க்கப்பட்டன.

தொடர் விசாரணை



லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி., ராஜேஷ் கூறுகையில், கோவை மாநகராட்சியில் நடந்த சோதனையில் பில் கலெக்டர்கள், ஒப்பந்ததாரர்கள் கொடுத்து வைத்தது மற்றும் பொதுமக்களிடம் வாங்கியது உட்பட, 12 ஆயிரத்து 200 ரூபாய் கணக்கில் வராத பணம் அலுவலக உதவியாளர் ஒருவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. மற்ற அலுவலர்களிடம் இருந்த பணத்துக்கு உரிய கணக்குகள் உள்ளன. அவை தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது. விசாரணை முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

@block_B@

குன்னுாரில் ரெய்டு



நீலகிரி மாவட்டம், குன்னுார் நகராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை, 3:00 மணி முதல் 8:00 மணி வரை லஞ்ச ஒழிப்புதுறை டி.எஸ்.பி., ஜாய் தயாளன் மற்றும் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு ஆகியோர் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். தொடர்ந்து, நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மட்டுமின்றி அங்கு வந்த சில ஒப்பந்ததாரர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. போலீசார் கூறுகையில்,' இரவு வரை பணம் எதுவும் கைப்படவில்லை; ஆவணங்களை மட்டும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்' என்றனர்.block_B

@block_Y@

ஊத்துக்குளியில் ரூ.19,300 சிக்கியது



திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையில், போலீசார் நேற்று மாலை ஊத்துக்குளி பேரூராட்சி அலுவலகத்திற்குள் ரெய்டு நடத்தினர். அலுவலகத்தின் நுழைவாயில்களைப் பூட்டிவிட்டு, ஊழியர்களின் மேஜைகள் மற்றும் உடைமைகளில் விடியவிடிய சோதனை நடந்தது. அதில், இரு அலுவலர்களிடம் இருந்து, கணக்கில் வராத, 19 ஆயிரத்து, 300 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடக்கிறது. பொதுவாக, வெளியூர்களில் தங்கிப் பணியாற்றும் சில அலுவலர்கள் வாரம் முழுவதும் வசூலான லஞ்சப் பணத்தை வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை மாலையில் பெற்றுக் கொண்டு சொந்த ஊருக்குக் கிளம்புவது வழக்கம். இதை முறியடிக்கும் நோக்கில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.block_Y

@block_G@

ராஜேந்திரனின் 'ராஜாங்கம்'



கோவை மாநகராட்சி எல்லையில், அதிக வணிக வளாகங்கள் இருப்பது மத்திய மண்டலத்தில் தான். இதனால், அப்ரூவல், வரி எல்லாவற்றிலும் பணம் தாராளமாக புழங்கும். தி.மு.க., ஆட்சியில், 2024ம் ஆண்டு, இதே மத்திய மண்டல அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றிய விமல்ராஜ் என்பவரிடம், அலுவலகத்தில் வைத்தே லஞ்ச ஒழிப்பு போலீசார் 1.02 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

அதே பாணியில், நேற்றும் மத்திய மண்டல அலுவலகத்துக்கு குறிவைத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு நடத்தினர். மண்டல தலைவர், உதவி கமிஷனரை நேற்று பகல் நேரத்தில் யார், யார் சந்தித்தனர் என்று போலீசார் விசாரித்துள்ளனர்.

ஒரு வெள்ளை பேப்பரில் அலுவலர்களின் பெயர், முகவரி, மொபைல் போன் எண் ஆகியவற்றை எழுதி வாங்கினர். அனைத்து ஊழியர்களின் டிபன் பாக்ஸ், வாகனங்களில் தீவிர சோதனை செய்யப்பட்டது. உதவி கமிஷனர் அலுவலக உதவியாளர் ராஜேந்திரன் என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் வரவே, அவரிடம் விசாரணை தீவிரப்படுத்தினர். அப்போது. கணக்கில் வராத பணம் சிக்கியுள்ளது.

மத்திய மண்டல பொறுப்பு உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி, தெற்கு மண்டல உதவி கமிஷனராகவும் உள்ளார். மத்திய மண்டலத்துக்கு அவ்வப்போது தான் வருவார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, ராஜேந்திரன் பைல்களுக்கு, 'வசூல் வேட்டை' நடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.block_G

Advertisement