மாணவர்களுக்கு உதவித்தொகை, விடுதிகளில் அறை வழங்க வேண்டும்; அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

சென்னை: 'தகுதியான மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் விடுதிகளில் அறை வழங்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் பொது பட்ஜெட் மற்றும் வேளாண்துறைக்கான தனி பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக, துறை வாரியாக முதல்வர் விஜய் ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறார். இன்று காலை, உயர்கல்வித்துறை ஆய்வுக் கூட்டம் நடந்தது.

இதில், அமைச்சர்கள் விஸ்வநாதன், மரியவில்சன், தலைமைச் செயலர் சாய்குமார், நிதித்துறை செயலர் சித்திக், உயர்கல்வித் துறை செயலர் அருண் ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய முதல்வர், 'மாநிலம் முழுதும், தகுதியான மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். பரிந்துரை கடிதம் இல்லாமல், தகுதியுள்ள மாணவர்கள் அனைவருக்கும், விடுதிகளில் அறைகள் வழங்க வேண்டும்' என, அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக நிலவும், சட்ட சிக்கல்களை தீர்ப்பது குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார். காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்பவும், முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement