இந்தோனேஷியா நாட்டில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

2

புதுடில்லி: பிரதமர் மோடி மூன்று நாடுகள் பயணத்தின் முதல் கட்டமாக நேற்று இந்தோனேஷியா சென்றார். ஜகார்த்தா விமான நிலையம் சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோ நேரில் சென்று வரவேற்றார்.

பிரதமர் மோடி இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கான பயணத்தை நேற்று தொடங்கினார்.

இந்த பயணம் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 'தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான உறவை, 'ஆக்ட் ஈஸ்ட்' கொள்கை வலுப்படுத்தும்.

'இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் பரஸ்பர வளர்ச்சியை வலியுறுத்தும், 'மகாசாகர்' தொலைநோக்கு திட்டம் ஆகியவற்றை இந்தப் பயணம் முன்னெடுத்து செல்லும்' என தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, டில்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவுக்கு நேற்று சென்றார். பிரதமரின் விமானம் இந்தோனேஷிய எல்லையை அடைந்ததும், அந்நாட்டு போர் விமானங்கள் அணிவகுத்து வரவேற்றன.

விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோ நேரில் சென்று வரவேற்றார். இந்திய வம்சாவளி மற்றும் இந்தோனேஷிய குழுவினர் பாரம்பரிய முறைப்படி பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடத்தி பிரதமரை வரவேற்றனர்.

இந்தியா -- இந்தோனேஷியா இடையேயான ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் செயலில் உள்ள திட்டங்கள் குறித்து இன்று இருநாட்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர்.

அதன் பின், மத்திய ஜாவா மாகாணத்தின் யோக்யகர்த்தா நகரில் உள்ள பழமையான பிரம்பானான் ஹிந்து கோவிலுக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார்.

மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா தெய்வங்களுக்காக 10ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான மற்றும் பிரமாண்டமான கோவில் இது. இந்தோனேஷியா பயணத்தை முடித்த பின், இரண்டாவது நாடாக பிரதமர் மோடி நாளை ஆஸ்திரேலியா செல்கிறார்.

Advertisement