ஏற்றுமதி பொருட்களின் தயாரிப்பிட சான்று; புதிய விதிகளை அறிவித்தது மத்திய அரசு

புதுடில்லி: இந்தியா - பிரிட்டன் இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, ஏற்றுமதி பொருட்களின் தயாரிப்பிடத்தை நிர்ணயிப்பதற்கான விதிகளை மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியா -- பிரிட்டன் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், சுங்க வரி சலுகைகளை பெறுவதற்கு, பொருட்கள் எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டன என்பதை உறுதி செய்யும் தயாரிப்பிட சான்றிதழ், முக்கிய ஆவணமாகும். இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தின் சலுகைகளை, மூன்றாவது நாட்டை சேர்ந்த பொருட்கள் தவறாக பெறுவதை தடுக்க, பொருட்களின் உண்மையான தயாரிப்பிடத்தை உறுதி செய்வது அவசியம்.

இரு நாடுகளிலும் அங்கீகாரம் பெற்ற அமைப்புகள், இத்தகைய சான்றிதழ்களை வழங்க அனுமதிக்கப்படுகின்றன. 'இந்தியா -- பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், பொருட்களின் தயாரிப்பிடத்தை நிர்ணயிப்பதற்கான சுங்க வரி விதிகள் - 2026' என்ற பெயரில், இவ்விதிகள் அமல்படுத்தப்படுகின்றன. இவை, ஜூலை 15 முதல் அமலுக்கு வருகின்றன.

இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 99 சதவீத பொருட்கள் சுங்க வரியின்றி சந்தைக்குள் நுழையும். இதனால், ஜவுளி, கடல்சார் உணவு பொருட்கள், தோல் பொருட்கள், காலணிகள், விளையாட்டு உபகரணங்கள், பொம்மைகள், வைரம் மற்றும் நகைகள், பொறியியல் பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், கரிம ரசாயனங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு புதிய ஏற்றுமதி வாய்ப்புகள் உருவாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement