இடிந்து விழும் நிலையில் புராதன கோவில் புனரமைக்க இழுத்தடிக்கும் அறநிலையத்துறை

சென்னை: பொன்னேரி அடுத்த நாலுாரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில், பாழடைந்து இடியும் நிலையில் உள்ளது. இக்கோவிலை புனரமைக்க வரைபடம் தயாரித்து சமர்ப்பித்த பிறகும், மூன்று ஆண்டுகளாக அறநிலையத்துறை அலைய விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நாலுார் கிராமத்தில் அமைந்துள்ள, வரலாற்று சிறப்புமிக்க நாகமல்லீஸ்வரர் உடனுறை அங்காள பரமேஸ்வரி கோவில், தற்போது முற்றிலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.

அறநிலையத்துறையின் மெத்தனப் போக்கால், புனரமைப்பு பணிகளைத் தொடங்க முடியாமல், கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

நாலுார் கிராமத்தில் உள்ள இந்த பழமையான கோவிலுக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். காலப்போக்கில் பராமரிப்பின்றி, இக்கோவிலின் கருவறை, பிரகார மண்டபம் உள்ளிட்ட கட்ட டங்களின் ஆயுட்காலம் முடிந்து, ஆங்காங்கே சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது.

இக்கோவிலில் வீற்றிருக்கும் அம்மன், மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுகிறது. இங்கு மாசி மாதம் நடக்கும் மயான கொள்ளை மிகவும் பிரசித்தமானது.

ஆனால், கோவில் நிர்வாகம் மற்றும் கோவில் சிதிலமடைந்துள்ள காரணத்தால், கடந்த எட்டு ஆண்டுகளாக திருவிழா நடக்கவில்லை.

இந்நிலையில், வழிபாட்டிற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக, உள்ளூர்வாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, நாலுார் கிராம மக்கள் கூறியதாவது:

கோவிலின் நிலையை உணர்ந்து, ஊர் பெரியவர்கள் மற்றும் பக்தர்கள் ஒன்றிணைந்து, ஆகம விதிப்படி புதிய கோவில் கட்ட, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டோம்.

இதற்காக, 60 ஆயிரம் ரூபாய் செலவில், வரைபடம், திட்ட மதிப்பீடு என அனைத்தையும் தயார் செய்து, ஹிந்து சமய அறநிலையத் துறை விதிகளின்படி, அனுமதி கோரி விண்ணப்பித்தோம்.

அறநிலையத்துறை அனுமதி வழங்கும் என்ற நம்பிக்கையில், 2024ம் ஆண்டு பாலாலயம் செய்தோம். ஆனால், அறநிலையத்துறை அதிகாரிகள், கடந்த மூன்று ஆண்டுகளாக அனுமதி வழங்காமல் கோப்புகளை முடக்கி வைத்துள்ளனர். இதனால், திருப்பணிகளை தொடங்க முடியாமல் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

இக்கோவிலுக்கு சொந்தமான சிறப்புமிக்க புராதன சிலைகளை கூட, இங்கு வைக்கும் சூழல் இல்லாததால், அருகாமையில் உள்ள ஒரு சிவன் கோவிலில் வைத்துள்ளோம்.

கோவில் இடிந்து ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் முன், மாவட்ட நிர்வாகமும், அறநிலையத்துறை அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, கோவிலை புனரமைக்க அனுமதி வழங்கி, பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement