18 பெண்களின் உயிரை பலி வாங்கிய இறால் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு 'சீல்'

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே, 18 பெண்களின் உயிரை பலி வாங்கிய இறால் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு, நேற்று 'சீல்' வைக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில், கடந்த 21ம் தேதி அமோனியா வாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. இதில், ஒடிஷா, அசாம், ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த, 83 பேர் பாதிக்கப்பட்டனர்.

இதில், 18 பெண்கள் உயிரிழந்தனர். 54 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், 11 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொழிற்சாலையில் இருந்த அமோனியா வாயுவை அகற்றும் பணி, கடந்த 4ம் தேதி தொடங்கியது. தொழிற்சாலையில் இருந்த 3 டன் அமோனியா வாயு பாதுகாப்பாக அகற்றப்பட்டு, கன்டெய்னர் லாரிகள் மூலம் ஒசூரில் உள்ள விநியோக நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அமோனியா வாயு முற்றிலும் அகற்றப்பட்ட நிலையில், நேற்று மாலை தொழிற்சாலையில் உள்ள அலுவலக அறை, தொழிலாளர்கள் தங்கும் அறை, அமோனியா வாயு டேங்கர் இருந்த அறை ஆகியற்றிற்கு, திருவள்ளூர் கலெக்டர் கவிதா உத்தரவின் பேரில், ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் 'சீல்' வைத்தார்.

இன்று, தொழிற்சாலையின் நுழைவாயில் 'சீல்' வைக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., வினோத் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement