அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி கரும்பு பயிரிடுவோர் சங்கம் வலியுறுத்தல்
உடுமலை: உடுமலை அருகேயுள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைக்க உடனடியாக நிதி ஒதுக்கி, ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்கம் சார்பில், தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில், தமிழகத்தின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையாக, 1960ல் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை துவக்கப்பட்டது.
கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலுள்ள, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனர்.
இந்த ஆலையில் உள்ள பழமையான மற்றும் இயந்திரங்கள் தேய்மானம் காரணமாக, அரவைத்திறன் குறைந்து, முழு கொள்ளளவு அரவையை இழந்தது.
இயந்திரங்கள் முழுமையாக பழுதடைந்ததால், கடந்த 2023ம் ஆண்டு முதல், ஆலையில் கரும்பு அரவை மேற்கொண்டு சர்க்கரை உற்பத்தி செய்ய முடியாமல் முடங்கியுள்ளது.
இதனால், மூன்று மாவட்டத்திலுள்ள கரும்பு விவசாயிகள், தாங்கள் விளைவித்த கரும்புகளை ஆலைக்கு வழங்க முடியாமல், தனியார் ஆலைகளுக்கு கட்டுப்படியாகாத விலைக்கு விற்று வருகிறார்கள். மேலும் கரும்பு சாகுபடியும் வெகுவாக குறைந்து வருகிறது.
சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இது குறித்து தமிழக முதல்வருக்கு அளித்த கோரிக்கை அடிப்படையில், வல்லுநர் குழு அமைக்க உத்தரவிடப்பட்டு, அக்குழுவினர் கடந்தாண்டு, அக்.,10ல், ஆலையில் கள ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, ஆலையை புனரமைத்து, மீண்டும் இயக்க ரூ.110 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசுக்கு, அக்., 14ம் தேதி வழங்கினர்.
ஆனால், ஆலையை புனரமைக்க தேவையான நிதி ஒதுக்காத காரணத்தினால், கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பணியாற்றிய, தொழிலாளர்களும் மற்ற ஆலைகளுக்கு மாற்றப்பட்டு, கோட்ட அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
மேலும், துணை ஆலையான எரிசாராய வடிப்பாலைக்கு தேவையான மூலப்பொருளான, மொலாசஸ் இல்லாததால், அந்த ஆலையும் உற்பத்தியின்றி மூடப்பட்டுள்ளது.
எனவே, புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர், அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க தேவையான நிதி ஒதுக்கி, ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆலைக்கு கரும்பு பதிவு செய்ய ஏதுவாக பழநி, நெய்க்காரபட்டி, குமரலிங்கம், கணியூர் ஆகிய கோட்ட கரும்பு அலுவலங்களை மீண்டும் திறந்து, தேவையான களப்பணியாளர்கள் வாயிலாக கரும்பு பதிவு செய்ய வேண்டும்.
அரசுக்கு அதிக வருவாய் அளிக்கும், துணை ஆலையான எரிசாராய ஆலைக்கு, தேவையான மூலப்பொருள் மொலாசஸ், பிற ஆலைகளிலிருந்து கொள்முதல் செய்து, அதனையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் சண்முகவேலு, பொது செயலாளர் ஈஸ்வரன் மற்றும் விவசாயிகள், முதல்வர், வேளாண் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளனர்.
மேலும்
-
தகுதியான அனைவருக்கும் கட்டாயம் கிடைக்க வேண்டும்; முதல்வர் விஜய் பிறப்பித்த அதிரடி உத்தரவு
-
ஒரே ஓடுபாதையில் இரு விமானங்கள்; அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்ப்பு
-
மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு
-
இந்தியா, இந்தோனேஷியாவை இணைக்கும் கலாசார பாரம்பரியம்; பிரதமர் மோடி பெருமிதம்
-
அணைகள் நீர்மட்டம்
-
ஜம்மு காஷ்மீரில் 5 நாட்களாக நடந்த துப்பாக்கிச்சண்டை; பயங்கரவாதி சுட்டுக்கொலை