பருவமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கூடலுார்: கூடலுார், பந்தலுார் பகுதியில் தொடரும் பருவமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

கூடலுார், பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில், கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து, நீர்நிலைகளில் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று, அதிகாலை பெய்த கனமழையில், கோழிக்கோடு சாலை மரப்பாலம் -புளியாம்பாறை சாலை ஒட்டி தனியார் தேயிலை தொழிற்சாலையின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. வாகன போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டது. தேவர்சோலை சாலை, 2-வது மைல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. சேதமடைந்த பகுதிகளை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

ஊசிமலை அருகே, சாலையில் காலை மரம் விழுந்து வாகன போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது.

ஆனசெத்தகொல்லி பகுதியில் சுப்பரமணி என்பவர் வீட்டின் மீது மரம் விழுந்து மேற்கூரை சேதமடைந்தது. இதில் யாருக்கும் பாதிப்பும் ஏற்படவில்லை. கூடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், மரத்தை அகற்றி போக்குவரத்து சீரமைத்தனர்.

தொடர் மழையின் காரணமாக, கூடலுார், பந்தலூர் பகுதி பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

Advertisement