கோல்டி பிரார் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.41 லட்சம் சன்மானம்; எப்பிஐ அறிவிப்பு

வாஷிங்டன்: லாரன்ஸ் பிஷ்னோய் குற்ற கும்பலின் தலைவன் சதிந்தர்ஜீத் சிங் என்கிற கோல்டி பிரார் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.41 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்று எப்பிஐ அறிவித்துள்ளது.

சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடும் இந்தியாவைத் தளமாகக் கொண்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்காக, அமெரிக்கா 'ஆபரேஷன் ஹார்ட் பால்' என்ற கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக லாரன்ஸ் பிஷ்னோய், சதிந்தர்ஜீத் சிங் என்கிற கோல்டி பிரார், ஜக்கு பகவான்புரியா மற்றும் ரவீந்தர் சிங் தண்டா உட்பட 37 பேர் மீது அமெரிக்க அரசு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இவர்களிடமிருந்து அதிகளவு கோகைன் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த கோல்டி பிராருக்கு எதிராகச் சதித் திட்டம், மிரட்டிப் பணம் பறித்தல், மற்றும் சர்வதேசப் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் கடந்த 1ம் தேதி கலிபோர்னியா நீதிமன்றத்தில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில்,கோல்டி பிரார் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சுமார் ரூ.41 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்பிஐ அறிவித்துள்ளது.

Advertisement