தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு; இரு மருத்துவர்களிடம் விசாரணை

10



சென்னை: தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் இரு மருத்துவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா, தன்னிடம் சபாநாயகருக்கு எதிராக ஓட்டளிக்குமாறு சிலர் தொலைபேசியில் பேரம் பேசியதாக புகார் அளித்தார்.

இது குறித்து, சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து, அரும்பாக்கத்தைச் சேர்ந்த, 'யூ- டியூபர்' திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் உட்பட எட்டு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமாருக்கு முன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எம்எல்ஏவிடம் பேரம் வழக்கில் கைதான முக்கிய 5 பேரை சென்னை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விசாரணை வளையம் விரிவடைந்து வருகிறது. திருப்பூரைச் சேர்ந்த மருத்துவர் ராஜசேகர் மற்றும் நாமக்கல்லைச் சேர்ந்த ரமேஷ்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல, தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் தொடர்புடைய சிங்கப்பூரைச் சேர்ந்த லட்சுமண பெருமாள் என்பவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர் தவெக ஆட்சியைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் நபர்களிடம் சிங்கப்பூரில் இருந்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement