ரூ. 8.5 கோடி சம்பளத்தில் வேலை: உதறிவிட்டு சொந்த நிறுவனம் துவக்கிய ஐஐடி பட்டதாரி

8


மும்பை: மெட்டா நிறுவனத்தில் ஆண்டுக்கு 8.5 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்த பணியை உதறிவிட்டு, மும்பை ஐஐடி பட்டதாரி ஒருவர் சொந்தமாக ஏஐ ஸ்டார்ட் அப் துவங்கி அனைவரின் கவனத்தை பெற்றுள்ளார்.


ஜேஇஇ நுழைவுத்தேர்வில் அகில இந்திய அளவில் 33வது இடம் பிடித்த ரிஷப் அகர்வால், மும்பை ஐஐடியில் கணினி அறிவியல் பட்டம் பெற்றார். கனடாவில் உள்ள MILA என்ற ஏஐ ஆராய்ச்சி நிறுவனத்தில் பிஎச்டி முடித்தார்.


இதன் பிறகு Google Brain, Google Deepmind, waymo, Meta superintelligence ஆய்வகங்களில் ஏஐ தொடர்பான பணிகளில் ஈடுபட்டார். மெக்கில் பல்கலையிலும் பேராசிரியர் ஆக பணியாற்றிய அனுபவம் உண்டு. கூகுளின் ஜெம்மா மற்றும் ஜெமினி ஏஐ மாடலுக்கு அவர் அளித்த பங்களிப்புக்காக விருது பெற்றுள்ளார்.


இதன் பின்னர் 2025 ம் ஆண்டு மெட்டா நிறுவனத்தின் சூப்பர் இன்டலிஜென்ஸ் ஆய்வகத்தில் இணைந்தார். அவருக்கு ஆண்டு சம்பளமாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்( இந்திய மதிப்பில் 8.5 கோடி ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 5 மாதங்களில் அந்தப் பணியை ராஜினாமா செய்தார்.


அப்போது அவர் வெளியிட்ட பதிவில், மெட்டா, கூகுள், டீப்மைன்ட் என பல நிறுவனங்களில் 7.5 ஆண்டு பணிக்கு பிறகு, புதிய வகையான ரிஸ்க் எடுக்க உள்ளதாக தெரிவித்த அவர், வேகமாக மாறி வரும் உலகில் ரிஸ்க் எடுக்காமல் இருப்பது தான் பெரிய ரிஸ்க் என மெட்டா நிறுவனத்தின் சிஇஓ ஜக்கர்பெர்க் அறிவுரை வழங்கியதாக தெரிவித்தார்.


இதன் பிறகு வேறு எந்த பன்னாட்டு நிறுவனங்களில் இணையாமல், Periodic Labs என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நிறுவி அதில் பணியாற்ற துவங்கினார். இன்றைய அறிவியல் பரிசோதனைகளில் அதன் சாத்தியங்களை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த நிறுவனம் பணியாற்றி வருகிறது. புதிய பொருட்கள், மருந்துகள் மற்றும் இயற்பியலில் புது கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.
இந்த ஆய்வகத்திற்கு என்விடியா மற்றும் ஜெப் பெஜோஸ் ஆகியோரின் ஆதரவு கிடைத்துள்ளது. இதனால், அறிவியல் ஆராய்ச்சி உலகில் மிகவும் கவனிக்கப்படும் நிறுவனமாக Periodic Labs உருவாகி உள்ளது.

Advertisement