அவலம் பஸ் வசதி இல்லாத மலைக் கிராமங்கள் எஸ்.புதுாரில் இருந்து பஸ் வசதி இல்லை
எஸ்.புதுார், ஜூலை 11-
எஸ்.புதுார் ஒன்றியத்தில் கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாதததுடன், மாவட்ட தலைநகரான சிவகங்கைக்கு நேரடி பஸ் இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
மலையும் மலை சார்ந்த பகுதியுமாக விளங்கும் இவ்வொன்றியத்தில் 21 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இவ்வொன்றியத்தைச் சுற்றிலும் பெரும்பாலும் மலைத்தொடர்களே உள்ள நிலையில் மலை கிராமங்களே அதிகம் உள்ளன. மதுரை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் அமைந்திருந்தாலும் இக்கிராமங்களுக்கு பெரிய அளவில் பஸ் போக்குவரத்து இல்லை.
மெயின் ரோடுகளில் மட்டுமே அடிக்கடி பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான கிராமங்கள் மெயின் ரோடுகளுக்கு அப்பால் உள்ள நிலையில் அப்பகுதிக்கு ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரவும், நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்லவும் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக விவசாயிகள் அறுவடை செய்த காய்கறிகளை பொன்னமராவதி, நத்தம், துவரங்குறிச்சி, சிங்கம்புணரி உள்ளிட்ட சந்தைகளுக்கு கொண்டு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். தர்மபட்டி, கோணம்பட்டி பகுதிகளில் அதிக காய்கறி விளைச்சல் இருந்தும் அவற்றை சந்தைப்படுத்த பஸ் வசதி இல்லாததால் விவசாயத்தையே கைவிடும் நிலையில் மக்கள் உள்ளனர்.
மேலவண்ணாரிருப்பு, கீழவண்ணாரிருப்பு, கேசம்பட்டி, வெள்ளிக்குன்றம்பட்டி பகுதிகளுக்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் இக்கிரமங்கள் போக்குவரத்து இல்லாத தீவு போல் உள்ளது. மாவட்டத் தலைநகரான சிவகங்கைக்கு இப்பகுதியில் இருந்து நேரடி பஸ்போக்கு வரத்து இல்லை. கடந்த ஆட்சியில் அப்போதைய அமைச்சர் பெரியகருப்பன் எஸ்.புதுாரில் இருந்து மேலவண்ணாரிருப்பு வழியாக சிவகங்கைக்கு அரசு பஸ் ஒன்றை துவக்கி வைத்தார். சில நாட்களிலேயே அந்த பஸ் வேறு ஊருக்கு மாற்றம் செய்யப்பட்டது. மாவட்ட தலைநகரம் சென்று வர அப்பகுதி மக்கள் அதிகாலை 5:00 மணிக்கு புறப்பட்டு சென்று இரவு 10:00 மணிக்கு தான் வீடு திரும்பும் நிலை உள்ளது. எனவே ஒன்றியத்தில் தேவையான வழித்தடங்களில் கூடுதல் அரசு பஸ்களை இயக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.