அரசுப்பள்ளி மாணவிகளுக்கு கராத்தே, ஜூடோ பயிற்சி

கோவை: தமிழக அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஆக., முதல் கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ உள்ளிட்ட தற்காப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரையும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரையும் பயிலும் மாணவிகளுக்கும் மூன்று மாதங்கள் இப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கோவை மாவட்டத்தில் 231 அரசு நடுநிலைப்பள்ளிகள் மற்றும் 188 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 419 பள்ளி மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது.

ஒவ்வொரு பள்ளியிலும் அதிகபட்சமாக 100 மாணவிகளுக்கும், குறைந்தபட்சமாக 10 மாணவிகளுக்கும் பயிற்சி வழங்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணி நேரம் வீதம் வாரத்திற்கு இரண்டு நாட்கள், 24 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. தற்காப்புக் கலைப் பயிற்சியுடன் மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி, தியானமும் நடத்தப்படவுள்ளது.

அனைத்து பயிற்சி வகுப்புகளும் பெண் ஆசிரியர்களின் மேற்பார்வையில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும், தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement