விதிகளைத் தளர்த்தி கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வலியுறுத்தல்
விருதுநகர்: 'அரசு விதிகளைத் தளர்த்தி கருணை அடிப்படையில் விண்ணப்பித்து காத்திருக்கும் அனைவருக்கும் சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் பணி நியமனம் வழங்க வேண்டும்,' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ரமேஷ், பொதுச்செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியுள்ளதாவது: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 32 குடும்பங்களுக்கு முதல்வர் விஜய்கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கியுள்ளார். இதை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வரவேற்கிறது.
அதே நேரம் தமிழக அரசுத்துறைகளில் பணிபுரிந்து மரணமடைந்த அரசு ஊழியர்களின் வாரிசுகள் கருணை அடிப்படை பணி நியமனத்திற்கு விண்ணப்பித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கின்றனர்.
கருணை அடிப்படை பணி நியமனம் தொடர்பாக தி.மு.க., அரசு வெளியிட்ட அரசாணையில் ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களில் 5 சதவீதம் மட்டுமே கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் இனி கருணை அடிப்படையில் குரூப் சி பணி நியமனமே கிடையாது என்ற நிலை ஏற்பட்டது.
இந்த அரசாணையை மறுபரீசிலனை செய்ய மனிதவள மேலாண்மை துறை அமைச்சரிடம் நேரில் முறையிட்டோம். எங்கள் முறையீடுகளை புதிதாக பதவி ஏற்றுள்ள த.வெ.க., அரசு மறு பரீசிலனை செய்ய மறுத்து விட்டது.
அதே நேரம் கரூர் கூட்ட நெரிசலில் இறந்த குடும்பத்திற்கு நேற்று முதல்வர் கருணை அடிப்படை பணிநியமன ஆணையை வழங்கி உள்ளார். இச்செயல் பாரபட்சமானது.
இதனால் கருணை அடிப்படை பணி நியமனத்திற்குவிண்ணப்பித்துகாத்திருக்கும் பல ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனால் அரசு ஊழியர்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியை போக்கிட அரசு விதிகளைத் தளர்த்தி கருணை அடிப்படையில் விண்ணப்பித்து காத்திருக்கும் அனைவருக்கும் சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் பணி நியமனம் வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளனர்.