வேப்பங்கொட்டை விலை சரிவால் ஏமாற்றம்

திருப்பாச்சேத்தி, ஜூலை 12-

தமிழகத்தில் இந்தாண்டு சீசன் தொடங்கியதை அடுத்து வேப்பங்கொட்டை சேகரிக்கும் பணியில் கூலி தொழிலாளர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நிழலுக்காக வேப்ப மரங்கள் வளர்க்கப்படுகின்றன. வறட்சியை தாங்கி வளரும் வேப்ப மரங்களில் ஏப்ரல், மே மாதங்களில் பூக்கள் பூக்க தொடங்கும், நன்கு வளர்ச்சியடைந்த மரங்களில் மழை பொழிவை பொறுத்து பூக்கள் அதிகமாக இருக்கும்.

மார்ச், ஏப்ரலில் பூக்க தொடங்கிய பின் ஜூன், ஜூலையில் பழங்கள் உருவாகும், ஆடி காற்றில் பழங்கள் உதிர தொடங்கும், ஒரு மரத்தில் அதிகபட்சமாக 10 கிலோ விதைகள் வரை கிடைக்கும். கிராமப்புறங்களில் பலரும் வேப்பம்பழத்தை சேகரித்து அதன் தோல் நீக்கி கொட்டையை விற்பனை செய்வார்கள், கிராமப்புறங்களில் இது வருவாயை ஏற்படுத்தி தரும், ஒரு மரத்தில் இருந்து ஐந்து முதல் பத்து கிலோ கொட்டை வரை கிடைக்கும், வேப்பம் பழ விதைகளை நாட்டு மருந்து தயாரிக்கவும், வேப்ப எண்ணெய் எடுக்கவும் பயன்படுத்துகின்றனர்.

சீசன் காலங்களில் ஒருகிலோ வேப்பமர விதை 160 ரூபாய் வரை விற்பனையாகும், சிறு வியாபாரிகள் கிராமப்புறங்களில் வேப்பமர விதைகளை வாங்கி சேகரித்து பெரிய வியாபாரிகளிடம் விற்பனை செய்வார்கள், இந்தாண்டு கடும் கோடை வெயில் காரணமாக வேப்ப மரங்களில் பூக்கள் அதிகளவில் உதிர்ந்து விட்டன. வேப்ப மரங்களில் பழங்களும் போதிய அளவு விளைய வில்லை. விளைச்சல் இல்லாத நிலையில் வேம்பு மர விதைகளை வாங்க பெரிய வியாபாரிகளும் முன் வராததால் விலை கடுமையாக குறைந்துள்ளது. கடந்தாண்டு ஒரு கிலோ 165 ரூபாய் என விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்தாண்டு 60 முதல் 70 ரூபாய் என வியாபாரிகள் வாங்குகின்றனர்.

நாள் முழுவதும் வேப்பம்பழ விதைகளை சேகரித்தால் அதிகபட்சமாக 2 கிலோ வரையில் தான் கிடைக்கும். ஆடி பிறக்காத நிலையில் அடுத்த மாதம் விதை அதிகரிக்க தொடங்கும். எனவே விலை மேலும் சரிய வாய்ப்பு உண்டு.

வியாபாரிகள் கூறுகையில், திருப்புவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பலரும் வேப்ப மர விதைகளை சேகரித்து கொண்டு வருகின்றனர். அதனை பாதுகாப்பாக வைக்க போதிய இடவசதி இல்லை. வரத்து அதிகரிப்பால் விலையும் குறைந்துள்ளது, என்றனர்.

வேப்ப மர விதைகளை விருதுநகர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள், சித்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அதிகமாக வாங்கி எண்ணெய், மருந்து தயாரிக்க பயன்படுத்துகின்றனர். கடந்த சில வருடங்களாக விதைகளுக்கு போதிய வரவேற்பு இல்லாததால் நிறுவனங்களும் வாங்க மறுக்கின்றன

Advertisement