வானில் மழையென பொழிந்த மாங்கனிகள் விதைகளாக விழுந்து விருட்சமாகிறது காரைக்கால் நகராட்சியின் அசத்தல் முயற்சி

காரைக்காலின் வீதிகளில் அண்மையில் மழையெனப் பொழிந்த அந்த  மாங்கனி திருநாளை, பக்தர்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். பிச்சாண்டவர் வீதியுலா வந்தபோது, காரைக்கால் மக்களின் பக்திப் பெருக்கால் வானிலிருந்து விழுந்தவை அந்த  மாங்கனிகள். இவை வெறும் கனிகள் மட்டுமல்ல. பக்தர்களின் வேண்டுதல்கள் சுமந்த புனித விதைகள்.. பொதுவாகவே, மாங்கனித் திருவிழாவில் சிதறிக்கிடக்கும் கனிகளைப் பொறுக்கிச் சென்று உண்பது, ஒரு பிரசாதமாகவே பார்க்கப்படும். ஆனால், இந்த முறை காரைக்கால் நகராட்சி நிர்வாகம் கையில் எடுத்திருக்கும் ஒரு முடிவு, பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

திருவிழா முடிந்ததும் வீதிகளில் தேங்கிக் கிடந்த அந்த 4,600 மாங்கனி விதைகளை, நகராட்சி ஊழியர்கள் மிகவும் கவனமாகச் சேகரித்தனர். துாக்கி எறியப்பட வேண்டிய கழிவாகப் பார்க்கப்பட வேண்டிய அந்த விதைகளை, மீண்டும் மண்ணுக்கே அர்ப்பணிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

இதற்காக நகராட்சி நிர்வாகம், விதைகளைச் செம்மையாக நட்டு வளர்ப்பதற்கான மண்ணையும் உரங்களையும் தயார் செய்து, ஒரு சிறப்பான ஏற்பாட்டைச் செய்திருக்கிறது.

இந்த விதைகள் வெறும் செடிகளாக வளரப் போவதில்லை. வருங்கால சந்ததிக்கு நிழல் தரும் மாமரங்களாக வளரப் போகின்றன என்ற அந்தத் முடிவு  இயற்கை ஆர்வலர்களை  பலரையும் நெகிழ வைத்திருக்கிறது. எப்போதுமே திருவிழாக் காலங்களில் குப்பைகள் சேர்வது ஒரு சவாலாக இருக்கும். ஆனால், காரைக்கால் நகராட்சி, அந்தப் புனிதமான விழாவை, ஒரு பசுமைத் திட்டமாக மாற்றியிருப்பது பாராட்டுக்குரியது.

இந்த விதைகள் வளர்க்கப்பட்டு, நாற்றுகளாகத் தயார் செய்யப்பட்ட பின், காரைக்காலின் பொது இடங்களிலும், பூங்காக்களிலும் நடப்பட இருக்கின்றன. பக்தர்களின் கைகளால் வீசப்பட்ட விதைகள், மீண்டும் காரைக்காலின் மண்ணிலேயே வேர் பிடித்து, எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கான மாங்கனிகளைச் சுமந்து நிற்கும் போது, அது காரைக்கால் அம்மையாருக்கு நாம் செய்யும் உண்மையான நன்றிக்கடனாகவே இருக்கும்.

ஆன்மிகம் என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல; இயற்கையை நேசிப்பதும், மரங்களை வளர்ப்பதும் கூட ஒரு வழிபாடுதான் என்பதை, இந்த 4,600 மாங்கனி விதைகள் மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியிருக்கின்றன.

பக்தர்கள் இறைத்த மாங்கனிகள், மீண்டும் இந்த மண்ணின் மடியில் விதைக்கப்பட்டு, மீண்டும் அதே ஊருக்கு நிழலையும் கனியையும் கொடுக்கப்போகும் இந்த நிகழ்வு... இயற்கையின் சுழற்சியில் அழகான கவிதை தானே... நீங்க என்ன சொல்றீங்க....

Advertisement