அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் கார் மீது கல்வீச்சு ‘மாஜி’ அமைச்சர் மீது புகார்: செஞ்சி அருகே பதற்றம்

செஞ்சி: செஞ்சி அருகே அ.தி.மு.க., வினர் இரு கோஷ்டியாக தாக்கிக்கொண்டதை தொடர்ந்து, மாவட்ட செயலாளர் கார் மீது கல் வீசி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்குட்பட்ட வல்லம் பகுதியில் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் பசுபதி தரப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். கூட்டத்திற்கான நோட்டீசில் தொகுதி எம்.எல்.எல்.,வான முன்னாள் அமைச்சர் சண்முகம், ஒன்றிய செயலாளர் நடராஜன் பெயர் இல்லை. மேலும், அவர்களுக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இந்நிலையில், கூட்டம் துவங்குவதற்கு முன்பு, சண்முகம் ஆதரவு ஒன்றிய செயலாளர் நடராஜன் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் கூட்டம் நடத்த இருந்த திருமண மண்டபம் முன்பு திரண்டதால் பரப்பான சூழல் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், 11:45 மணியளவில் மாவட்ட செயலாளர் பசுபதி வந்ததும், சண்முகம் தரப்பினர் மண்டபத்தின் கேட்டை மூடி பசுபதி தரப்பினர் உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர். இதனால், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். சேர்களை எடுத்து வீசியும் தாக்குதல் நடத்தினர். போலீசார் சுமார் 30 நிமிட போராட்டத்திற்குப் பின், சண்முகம் தரப்பினரை அங்கிருந்து வெளியேற்றினர்.

அதனை தொடர்ந்து, கூட்டம் துவங்கியபோது மாவட்ட இணைச் செயலாளர் ஆனந்தி அண்ணாதுரை தலைமையில் பெண்கள் சிலர் வந்து, கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். பசுபதி தரப்பினர் அவர்களை வெளியேற்றினர்.

பின்னர் நடந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பசுபதி, ஒன்றிய செயலாளர்கள் சேகர், புண்ணியமூர்த்தி, விழுப்புரம் நகர செயலாளர் ராமதாஸ் உள்ளிட்டோர் பேசினர். ஒன்றிய நிர்வாகிகள் சகாதேவன், ரவி, நாகமுத்து, ஜெய், நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்து 1:00 மணியளவில் மாவட்ட செயலாளர் பசுபதி புறப்பட்ட போது, திண்டிவனம் வழியாக செல்ல வேண்டாம் என போலீசார் கூறினார். அதையடுத்து செஞ்சி வழியில் 100 மீட்டர் துாரம் பசுபதி காரில் சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் கல் வீசியதில் பசுபதியின் தலைக்கு பின்பக்கம் கார் கதவில் பட்டு கீழே விழுந்தது. இதில் கார் கதவு சேதமானது. பசுபதி காயமின்றி தப்பினார்.

இச்சம்பவத்தை கண்டித்தும், மாவட்ட செயலாளர் பசுபதி கார் வீசிய சண்முகம் ஆதரவாளர்களை கைது செய்ய வலியுறுத்தியும், செஞ்சி – திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை அங்கிருந்து அகற்றினர்.

மேலும், மாவட்ட செயலாளர் பசுபதி, சண்முகம், அவரது அண்ணன் ராதாகிருஷ்ணன் துாண்டுதல் பேரில் 20 பேர் தன்னைத் தாக்க வந்ததாகவம், கொலை செய்வதற்காக கல் வீசியதாகவும் செஞ்சி போலீசில் புகார் செய்தார்.

புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் வல்லம் பகுதியில் பரபரப்பும், பதற்றமும் நிலவியது.

Advertisement