பயிர்க்கடன் தள்ளுபடி பெறும் விவசாயிகள் பட்டியல் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ஆய்வு

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலுார் பகுதிகளில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் தள்ளுபடிக்கு தகுதிவாய்ந்த விவசாயிகள் பட்டியலை கூடுதல் பதிவாளர் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் கடந்த 2025ம் ஆண்டு மே 1ம் தேதி முதல் கடந்த பிப்., 28ம் தேதி வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடனாக ரூ.75 ஆயிரம் வரை பெற்ற விவசாயிகளின் கடன் தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் எனவும், ரூ.75 ஆயிரத்துக்கு மேல் பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு ரூ.35 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

இதையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 86 கூட்டுறவு கடன் சங்கங்களிலும் பயிர்க்கடன் தள்ளுபடிக்கு தகுதிவாய்ந்த பயனாளிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில், கீழத்தாழனுார் மற்றும் ஜி.அரியூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் தயார் செய்யப்பட்ட விவசாயிகள் பட்டியலை கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் பிருந்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், மைக்ரோ ஏ.டி.எம்., இயந்திரம் சரியாக செயல்படுகிறதா என ஆய்வு செய்து, கீழத்தாழனுார் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான காலி இடத்தில் வணிக வளாகம் அல்லது திருமண மண்டபம் கட்டி அதன் மூலம் சங்கத்திற்கு கூடுதல் வருமானம் கிடைக்க வழிவகை செய்யுமாறு அறிவுறுத்தினார்.

அப்போது, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், சரக துணைப்பதிவாளர்கள் சாந்தி, ரகு, திருக்கோவிலுார் நகர கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் விஜயகுமாரி, சங்க செயலாளர் அண்ணாதுரை மற்றும் கூட்டுறவு அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.

Advertisement