தலைமை மருத்துவமனையில் அமரர் ஊர்தி இல்லாத அவலம் 

காங்கயம், ஜூலை 12–

காங்கயம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, அங்கு பிரேத பரிசோதனை கூடமும் செயல்பட்டு வருகிறது. ஆனால், பிரேத பரிசோதனை முடிந்து வழங்கப்படும் உடல்களை உறவினர்களின் வீடுகளுக்கு இலவசமாகக் கொண்டு சேர்க்க அங்கு பிரத்யேக ‘அமரர் ஊர்தி’ இல்லை.

திருப்பூர் மாவட்டத்துக்கு மொத்தம், 5 இலவச அமரர் ஊர்திகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதில், 3 வாகனங்கள் திருப்பூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலும், தாராபுரம் மற்றும் உடுமலையில் தலா ஒரு வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளன. காங்கயம் வட்டாரத்தில் யாரேனும் இறந்தால், உடல்களைக் கொண்டு செல்ல திருப்பூரில் இருந்தோ அல்லது தாராபுரத்தில் இருந்தோ தான் வாகனம் வர வேண்டியுள்ளது.

மருத்துவமனை ஊழியர்கள் பல நேரங்களில் இந்த இலவச சேவை குறித்து உறவினர்களிடம் முறையாக எடுத்துக்கூறுவதில்லை என்றும், அப்படியே வாகனத்தை வரவழைத்தாலும் அது வந்து சேர நீண்ட நேரமாவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் வேறு வழியின்றி, தனியார் வாகனத்தை கட்டணம் கொடுத்துப் பயன்படுத்தும் அவல நிலை நீடிக்கிறது.

காங்கயம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு ஆறு ஆண்டு ஆகியும் இந்த வசதி இல்லை. எனவே, காங்கயம் தலைமை மருத்துவமனைக்கென தனியாக ஒரு இலவச அமரர் ஊர்தியை நிறுத்தி வைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement