தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு செக்; அமெரிக்கா, பிரான்ஸ், கனடா கூட்டு வேட்டை

ஒட்டாவா: பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் சர்வதேச நெட்வொர்க்கை வேரறுக்க அமெரிக்காவைத் தொடர்ந்து தற்பொழுது பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகளும் களமிறங்கியுள்ளன.

சமீபத்தில், அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து நடத்திய பிரமாண்ட கூட்டு சோதனையில், நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த, 24 முக்கிய குற்றவாளிகள் வளைத்து பிடிக்கப்பட்டனர்.
பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா, மஹாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் உள்ளிட்டோர் கொலை என பல்வேறு குற்றங்களில் தொடர்புடையது பிஷ்னோய் கும்பல்.

அத்துடன் போதைப்பொருள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் என சர்வதேச அளவில் அச்சுறுத்தலாக விளங்கும் இந்த கும்பலின் ஒட்டுமொத்த நெட்வொர்க்கையும் ஒடுக்க சர்வதேச போலீஸ் படைகள் கைகோர்த்துள்ளன.

இந்நிலையில், கனடாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் உணவகம் முன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு நெருக்கமான கிரிந்தர் தேவ்,40, என்பவரை பிரான்ஸ் நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

'டாக்டர்', 'ராக்கெட்', 'ரிட்ஸ் கார்ல்டன்' என பல ரகசிய பெயர்கள் கொண்ட அவர், பிஷ்னோய் கும்பலுக்கு தேவையான நிதியுதவிகளை வழங்கி வந்துள்ளார். அத்துடன் போதைப்பொருட்களை சர்வதேச அளவில் கடத்த சதித் திட்டம் தீட்டியதும் இவர் மீது சுமத்தப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டு.

தற்போது பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ள கிரிந்தரை கனடாவுக்கு நாடு கடத்த போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதேபோன்று கபில் சர்மா உணவக துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை மறைக்க உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஜஷன்தீப் சிங் என்ற மற்றொரு பிஷ்னோய் கும்பல் உறுப்பினரை இந்தியாவிற்கு நாடுகடத்த கனடா குடிவரவு மற்றும் அகதிகள் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Advertisement