பராமரிப்பு பணிக்காக 41 ரயில் சேவை ரத்து தாம்பரத்தில் கடும் நெரிசல்; பயணியர் அவதி
தாம்பரம்: சென்னை கடற்கரை -–- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள், நேற்று காலை 10:30 மணி முதல் மதியம் 3:30 மணி வரை நடந்தன.
இதனால், கடற்கரை -– தாம்பரம் –- செங்கல்பட்டு வழித்தடத்தில் இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் 41 புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
பயணியர் சிரமத்தை தவிர்க்க, தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் திருமால்பூருக்கு சிறப்பு ரயில்களும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருமால்பூரில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.
புறநகர் மின்சார ரயில் ரத்தால், சிறப்பு ரயில்களில் பயணிக்க தாம்பரம் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பேருந்துகளில் செல்ல தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பேருந்து நிலையங்களில் திரண்டதால், பயணியர் கூட்டம் அங்கும் அலைமோதியது.
இதனால், ஜி.எஸ்.டி., சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து சென்றன. ரயில் நிலையம், பேருந்து நிலையத்தில் நெரிசல் காரணமாக பயணியர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.