கிரேன் ‘ரோப்’ அறுந்து கோர விபத்து ராட்சத குழாயில் சிக்கி சிறுவன் பலி
புழல்: கிரேன் இயந்திரத்தின் கயிறு அறுந்து, ராட்சத குழாய் விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுவன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புழல், காவாங்கரை அடுத்த கண்ணப்பசாமி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ், 30. இவரது மகன் ஷாருக் ஈஸ்வரன், 3. நேற்று முன்தினம் ஷாருக்கை அழைத்துக் கொண்டு, விக்னேஷ் அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அந்நேரம், கண்ணப்பசாமி நகர் பிரதான சாலையில், கழிவுநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிக்காக, ராட்சத குழாயை எடுத்துக் கொண்டு கிரேன் வந்துள்ளது.
குழாயை துாக்கி பள்ளத்தில் வைக்க முயற்சி செய்தபோது, எதிர்பாராதவிதமாக கிரேன் கயிறு அறுந்ததில், அதில் இணைக்கப்பட்டிருந்த குழாய் கீழே விழுந்துள்ளது. குழாயின் ஒரு பகுதி சிறுவன் மீது மோதவே, சிறுவன் பலத்த காயமடைந்தார்.
உடனே, மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். தகவலறிந்த விக்னேஷின் உறவினர்கள், மருத்துவமனை முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பிற்காக மாதவரம் போலீசார் குவிக்கப்பட்டனர். மாதவரம் எம்.எல்.ஏ., விஜய் பிரபு மருத்துவமனைக்கு நேரில் சென்று, சிறுவனின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.
இந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், நேற்று அதிகாலை 3:00 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.
புழல் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கிரேன் ஓட்டுநர், உரிமையாளர் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.