மாவட்டத்தில் பயிர் கடன் பெற தகுதியானவர்கள்  14,504 பேர்: கூட்டுறவுத்துறையினர் அரசுக்கு பரிந்துரை

தேனி: மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வாங்கியவர்களில் 14,504 பேர் அரசு அறிவித்துள்ள விதிகளுக்குட்பட்டு பயிர் கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்களாக தேர்வாகி உள்ளனர். அவர்களின் கடன் விபர அறிக்கையை அரசுக்கு துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் 80, நகர கூட்டுறவு வங்கிகள் 2, மதுரை மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் 11, நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் 2, பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் 15, தலா ஒரு தொடக்க கூட்டுறவு பண்டகசாலை, வேளாண் விளை பொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் என மொத்தம் 116 கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இச்சங்கங்களின் மூலம் பொது வினியோக திட்டம், பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில் 80 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்கடன், கால்நடை பராமரிப்பு கடன்கள் வழங்கப்படுகிறது.



கடந்த நிதியாண்டில் 80 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் சுமார் 17ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ. 210 கோடிக்கு மேல் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு கடன் ரூ. 53 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் 2025 மே முதல் 2026 பிப்., வரை விவசாயிகள் பயிர் கடனாக ரூ. 75 ஆயிரம் அதற்கு குறைவாக வாங்கியிருந்தால் முழுமையாக தள்ளுபடி என்றும், ரூ.75 ஆயிரத்திற்கு மேல் வாங்கி இருந்தால் ரூ. 35 ஆயிரம் தள்ளுபடி என்றும் அரசு அறிவித்துள்ளது. அரசு அறிவித்துள்ளவாறு பயிர் கடன் பெற தகுதியான விவசாயிகளின் விபரங்கள் சிறப்பு குழு மூலம் கூட்டுறவு சங்கங்களில் ஆய்வு செய்யப்பட்டன. தகுதியான விவசாயிகளின் விபரம், கடன் எண் உள்ளிட்டவை சங்க அறிவிப்பு பலகைகளில் வெளியிட்டுள்ளனர்.

14,504 விவசாயிகள் தகுதிகூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 14,504 பேர் கடன் தள்ளுபடி திட்டத்தில் பயன் பெற தகுதி பெற்றுள்ளனர். அவர்களின் விபரங்கள் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இந்த தள்ளுபடி திட்டத்தில் பயனடைய முடியும். உதாரணமாக ஒரு ரேஷன்கார்டில் பெயர் இடம் பெற்றுள்ளவர்களில் 2 பேர் பயிர் கடன் வாங்கி இருந்தால் ஒருவரது கடன் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதே போல் ஒருவர் 2,3 பயிர் கடன்கள் வாங்கி இருந்தாலும் ஏதாவது ஒன்றில் மட்டுமே பயனடையலாம். அரசு ஊழியர்களாக இருந்தால் பயிர் கடன் தள்ளுபடி இல்லை என்றனர்.

Advertisement