21 வழக்கில் மட்டும் ஆஜரானவருக்கு அரசு வக்கீல் பதவி?
பி ல்டர் காபிக்கு ஆர்டர் தந்தபடியே, “வீட்டுப் பக்கம் யாருமே வர மாட்டேங்கறா ஓய்...” என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.
“யார் வீட்டுக்கு பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“தி.மு.க., துணை பொதுச்செயலரான பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி, விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலராகவும் இருக்கார்... திருக்கோவிலுார் சட்டசபை தொகுதியில் நின்னு தோத்து போயிட்டார் ஓய்...
“தேர்தல் தோல்விக்கு பிறகு, இவர் வீட்டுப் பக்கம் கட்சி நிர்வாகிகள் யாரும் வரது இல்ல... தி.மு.க., ஆட்சியில் பொன்முடியின் தீவிர ஆதரவாளரான காணை ஒன்றிய நிர்வாகி, நிறைய பினாமி பெயர்கள்ல அரசு டெண்டர்களை எடுத்து, கோடிக்கணக்குல சம்பாதிச்சிருக்கார் ஓய்...
“அவரைத் தவிர மற்ற நிர்வாகிகளையும், தொண்டர்களையும் பொன் முடியும், அவரது மகனும் கண்டுக்கவே இல்ல... இதனால, வெறுத்துப் போன கட்சியினர், அப்பா வையும், மகனையும் புறக்கணிச்சுட்டா ஓய்...” என்றார் குப்பண்ணா.
“ராஜா, தள்ளி உட்காருங்க...” என்ற அந்தோணிசாமியே, “முட்டைகளை தராம ஏமாத்துறாங்க...” என்றார்.
“யாருக்கு ஓய்...” என கேட்டார் குப்பண்ணா.
“திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்துல இருக்கிற அரசு பள்ளிகள்ல, மாணவர்களுக்கு மதியம் சத்துணவுடன் முட்டை தரணும்... ஆனா, ஒன்றிய சத்துணவுப் பெண் அதிகாரி, மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முட்டைகள் வழங்க மாட்டேங்கிறாங்க...
“உதாரணமா, வீராபுரம் உயர்நிலைப் பள்ளியில், 234 மாணவர்களுக்கு, 150 முட்டைகள் மட்டும் தர்றாங்க... ஆரிக்கம்பேடு நடு நிலைப் பள்ளியில், 260 மாணவர்கள் இருக்கிற சூழல்ல, 74 முட்டைகளும், அயனம்பாக்கம் மேல்நிலைப் பள்ளியில், 178 மாணவர்களுக்கு, 68 முட்டைகள் மட்டும் தர்றாங்க... அதே நேரம், 'நாங்க தான் முட்டைகளை குறைவா கேட்டோம்'னு, சத்துணவுப் பணியாளர்களிடம் கடிதமும் எழுதி வாங்கிடுறாங்க...” என்றார் அந்தோணிசாமி.
“ஸ்வேதா மேடம் அப்புறமா பேசுதேன்...” என மொபைல் போனை, 'ஆப்' செய்தபடியே வந்த பெரியசாமி அண்ணாச்சி, “21 வழக்குகள்ல மட்டுமே ஆஜரானவருக்கு முக்கிய பதவி குடுக்க போறாவ வே...” என்றபடியே தொடர்ந்தார்.
“உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள்ல அரசு வக்கீல்கள் நியமனம் நடந்துட்டு இருக்கு... இதுல, 'ஆளுங்கட்சிக்காக உழைச்ச பல வக்கீல்களுக்கு வாய்ப்பு கிடைக்கல'ன்னு பலரும் புலம்புதாவ வே...
“சென்னை உயர் நீதிமன்றத்துல ஒரு வக்கீல், 19 வருஷமா தொழில்ல இருக்காரு... இவருக்கு எந்த அதிகாரப்பூர்வ பொறுப்பும் இல்ல... ஆனாலும், கூடுதல் அட்வகேட் ஜெனரலின் அரசு கார்ல ஜோரா வலம் வர்றவர், 'நான் முதல்வரின் ஆலோசகருக்கு நெருக்கமானவன்'னு சொல்லி, 'அரசு வக்கீல் பதவிகள் வாங்கித் தர்றேன்'னு பலருக்கும் வாக்குறுதிகளை வாரி வீசுதாரு வே...
“அதோட, அவரும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பதவிக்கு காய் நகர்த்திட்டு இருக்காரு... இதனால, '19 வருஷ வக்கீல் தொழில்ல, 21 வழக்குகள்ல மட்டும் ஆஜரானவருக்குப் பதவி தரக்கூடாது... அவரது பின்னணி பத்தி சி.பி.ஐ.,யை விட்டு விசாரிக்கணும்'னு கவர்னருக்கு சில வக்கீல்கள் புகார் அனுப்பியிருக்காவ வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“லெனின் ஜெயபாலன், நாளைக்கு பார்க்கலாம் பா...” என, நண்பரிடம் அன்வர்பாய் விடைபெற, மற்றவர்களும் கிளம்பினர்.
மேலும்
-
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு
-
ஈரானில் மருத்துவமனை அருகே அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்; தொடரும் பதற்றம்
-
லஞ்ச ஊழல் புகார் எதிரொலி; சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட்
-
உ.பி., பல்கலையில் அனுமதியின்றி கட்டப்பட்ட 38 கட்டடங்களை இடிக்க உத்தரவு
-
ஜவுளி உற்பத்தியை விரைவுபடுத்த ரூ.21,000 கோடிக்கு மெஷின் இறக்குமதி; ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரிப்பு காரணம்
-
வரும் 30, 31ல் கரூரில் ஜவுளி தொழில் வாங்குவோர், விற்போர் சந்திப்பு; வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கலாம்